

இந்தாண்டு மட்டும், உலகம் முழுவதும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை, முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள், பெருந்தொற்றுக்குப் பிந்தைய புதிய யதார்த்தங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உந்துதலிலான மாற்றங்கள் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கின்றன.
அமேசான், இன்டெல் மற்றும் டி.சி.எஸ். உள்ளிட்ட பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், முதல்கட்டமாக தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. அதன்படி, இந்தாண்டு இதுவரை 218 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 1,12,732 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளன. பெரும்பாலான நிறுவனங்களில் இந்த ஆட்குறைப்பு, பணியாளர்களுக்கான செலவைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் நோக்கத்தில் நிறுவனங்கள் எடுக்கும் முதல் கட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனால் பல பெரிய நிறுவனங்களில் தலைமைப்பொறுப்புகளில் இருப்பவர்கள், நடுத்தர தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகளவில் வேலையிழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
அடுத்த கட்டமாக, மேலும் பலரைப் பணிநீக்கம் செய்யவும் பல முன்னனி நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இதுவரை வெளியான அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில், முன்னணி வணிக இணையத்தளமான ‘லே-ஆப்’ (Layoffs.fyi) என்ற இணையதளம் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் AI என்ற செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்து வருகிறது. செலவுகளைக் குறைத்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல் போன்ற வணிகம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏ.ஐ. வளர்ச்சியடைந்துவிட்டது. இந்தநிலையில் ஏ.ஐ.யை காரணம் காட்டி பெருநிறுவனங்கள் முதல் புத்தாக்க நிறுவனங்கள் வரை ஆட்குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
அதிகபட்சமாக முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்கள் 30,000 பேரையும், பிரபல ‘சிப்’ தயாரிப்பு நிறுவனமான ‘இன்டெல்’ 24,000 பேரையும், உள்ளூர் ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.) 20,000 பேரையும், அசெஞ்சர் 12,000 பேரையும், மைக்ரோசாப்ட் 9,000 பேரையும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ 600 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பட்டியல் வரும் நாட்களில் மேலும் நீளும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆட்குறைப்புக்கு பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியை காரணமாகக் காட்டுகின்றன. கோவிட் காலத்தில் அதிகரித்த வேலைக்கு ஆட்களை ஹையர் செய்த நிறுவனங்கள், இப்போது செலவுகளைக் குறைத்து, ஏ.ஐ., கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற புதிய துறைகளில் அதிக முதலீடு செய்ய முனைகின்றன.