

தொழில்நுட்ப வளர்ச்சி தொடர் முன்னேற்றத்தைக் கண்டு வரும் இன்றைய சூழலில், அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மிகுந்து வருகிறது. தற்போது தங்கத்தை விற்பனை செய்வதிலும் ஏஐ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது இனி தங்கத்தை விற்க வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
செயற்கை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் தங்க ஏடிஎம் மெஷின் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தங்க ஏடிஎம் மெஷின் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்த ஏடிஎம் இயந்திரம் நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், பழைய தங்கத்தை விற்பவர்களுக்கு அது மிகப் பெரிய லாபத்தை அளிக்கக் கூடும்.
பொதுவாக தங்க நகைகளை வங்கிகள், அடகு கடைகள் அல்லது நிதி நிறுவனங்களில் விற்கும்போது தங்கத்தின் தூய்மை மற்றும் எடையை சரியாக கணித்து, அதற்கேற்ப பணம் வழங்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் தற்போது இந்த கால இடைவெளியை வெறும் 30 நிமிடங்களாக குறைத்துள்ளது ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் தங்க ஏடிஎம் இயந்திரம்.
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தங்க ஏடிஎம் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஃபின்டெக் நிறுவனமான ‘கோல்ட்சிக்கா’, இந்த தங்க ஏடிஎம் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. தங்க ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது பழைய தங்க நகைகளை விற்று, வெறும் 30 நிமிடங்களிலேயே நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் தங்க ஏடிஎம், வெளிப்படைத் தன்மை, தங்கத்தின் தூய்மை மற்றும் துல்லியத்தை குறுகிய நேரத்திலேயே உறுதி செய்கிறது. மோசடி மற்றும் திருடப்பட்ட தங்கத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுக்க, இந்த தங்க ஏடிஎம் இயந்திரத்தில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது.
செயல்படும் முறை:
1. பொதுமக்கள் தங்களுடைய பழைய தங்கத்தை ஏடிஎம் இயந்திரத்தில் வைத்தவுடன், அது தங்கத்தை உருக்கும் வேலையைத் தொடங்கும்.
2. மனிதர்களின் தலையீடு இல்லாமல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்கத்தின் தூய்மை மற்றும் எடை ஆகியவற்றை ஏடிஎம் இயந்திரம் மிகத் துல்லியமாக கணக்கிடும்.
3. தங்கத்தின் தற்போதைய சந்தை விலை மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பழைய தங்கத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.
4. பிறகு வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டால், அடுத்த 30 நிமிடங்களுக்குள் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் தங்கத்திற்கான பணம் வரவு வைக்கப்படும்.