

தங்கம், வெள்ளி, எஸ்ஐபி மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் தான் செல்வ வளத்தைப் பெருக்கும் என பெரும்பாலான நடுத்தர மக்கள் நம்புகின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியின் தொடர் விலை உயர்வே இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணம். ஆனால் இவையெல்லாம் செல்வ வளத்தைப் பெருக்க உதவுவதற்கான கருவிகளே. உண்மையில் நீங்கள் செல்வ வளத்தைப் பெருக்க நினைத்தால், 3 யுக்திகளை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
1. சம்பளத்தை உயர்த்திக் கொள்ளுதல்:
ஒருவர் குறிப்பிட்ட சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் போது, கூடுதல் வருமானத்தை உறுதி செய்வது அவசியம். அதாவது சம்பளத்தைத் தாண்டி கூடுதலாக கிடைக்கும் 3,000 ரூபாய் கூட உங்களது நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் செய்யும் வேலையில் திறமையை வளர்த்துக் கொண்டு, மாத வருமானத்தை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.
மாதந்தோறும் கூடுதலாக கிடைக்கும் 3,000 ரூபாயை நீங்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு செய்து வந்தால், அது ரூ.1 கோடிக்கும் மேலாக பெருகியிருக்கும். இதிலிருந்து தொடக்க சம்பளம் எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்
2. சேமிப்பு விகிதம்:
ரூ.50,000 மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர், அதில் 10%-ஐ சேமிப்பதற்கும் அல்லது 30%-ஐ சேமிப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. 10% பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தொகை ஏறக்குறைய ரூ.1.8 கோடியாக பெருகியிருக்கும். அதுவே 30% முதலீடு செய்தால் ரூ.5.3 கோடியாக பெருகியிருக்கும். இதன்மூலம் எதிர்கால செல்வ வளத்தைப் பெருக்குவதில் சேமிப்பின் அளவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
3. விரைவான முதலீடு:
முதலீட்டைப் பொறுத்தவரை, காலம் தாழ்த்துவது தவறான செயல். முதலீடு செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், அன்றே முதலீட்டைத் தொடங்குவது தான் சிறந்தது. ஒரு வருட கால தாமதம் கூட, உங்களுக்கு கிடைக்கும் பலனில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விடும். மாதந்தோறும் ஒருவர் ரூ.25,000-ஐ சேமித்து வந்தால், 25 ஆண்டு காலத்தில் அவருக்கு ரூ.4.7 கோடி கிடைக்கும். அதுவே அவர் 30 ஆண்டுகள் சேமித்தால் ரூ.8.8 கோடி கிடைக்கும்.
வெறும் 5 ஆண்டு கால இடைவெளியில் ஒருவர் முதலீட்டில் நான்கு கோடி வருவாயை இழக்க நேரிடும். ஏனெனில் அதிக வருவாய் கிடைக்கும் முதலீட்டுத் திட்டங்களில் பெரும்பாலும் கூட்டு வட்டி முறை தான் பின்பற்றப்படுகிறது. ஆகவே தான் முதலீட்டுக்கு காலம் மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.
தங்கம், வெள்ளி, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி மற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்கள் அனைத்துமே, நமது செல்வ வளத்தைப் பெருக்குவதற்கான கருவிகள் தான். உண்மையான வளர்ச்சி என்பது சரியான நேரத்தில் முதலீடு செய்வதைப் பொறுத்தே அமையும். இதனை முறையாக கடைபிடிக்க நிதி ஒழுக்கத்தில் சிறந்து இருப்பதும், கடன் வலையில் சிக்காமல் இருப்பதும் அவசியம். அவ்வகையில் மேற்கண்ட 3 யுக்திகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், எதிர்காலத்தில் நிதி நெருக்கடி இன்றி வளமாக வாழலாம்.