

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருப்பதை அனைவரும் அறிவர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று சட்டசபையில் இபிஎஸ் மற்றும் வேலுமணி அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் இரு குழுக்களாக அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிவி.சண்முகம் அலுவலகத்தில் எம்எல்ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இபிஎஸ் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் 22 பேர் தவெக-வுக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவாக வாக்களிப்பதை ஏற்க முடியாது என இபிஎஸ் ஆதங்கமாக ணதெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு எதிராக அமைந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்து இபிஎஸ் முதல்வராக விரும்பினார் என சில நாட்களுக்கு முன்பு சிவி.சண்முகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது உண்மையற்ற தகவல் என இபிஎஸ் தெரிவித்தார்.
இன்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தவெக-விற்கு ஆதரவளித்த நிலையில், அதிமுகவை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சின்னம்மா சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும். அதுவே அதிமுகவிற்கு பலத்தை கொடுக்கும். இல்லையெனில் அதிமுக தோல்விகளையே சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் அதிமுக தோல்விப் பாதையில் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அதனை மீண்டும் கட்டமைக்கவே போராடி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
விரைவில் இபிஎஸ் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஏற்கனவே வேலுமணி அணி தெரிவித்தது. இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். ஆனால் சின்னம்மா சசிகலா தனியாக கட்சி ஆரம்பித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி சேர்ந்து, தேர்தலை சந்தித்தார்.
பெரும்பாலான தொகுதிகளில் சசிகலாவின் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால், அதிமுக தோல்வி அடைந்தது. இந்நிலையில் சசிகலா அதிமுகவில் இணைந்தால், அது அதிமுக கட்சிக்கு பலமாகவே பார்க்கப்படும்.
ஏற்கனவே செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவிலிருந்து பிரிந்து வேறு கட்சிக்கு சென்றுள்ளதால், தற்போது சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது அவசியம் என்றே கூறப்படுகிறது