

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த மே பத்தாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் சட்டமன்றத்தில் விஜய் முதல்வராவதற்கான தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (மே 13) நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் ஏற்கனவே சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக அணி, தவெக-விற்கு ஆதரவளிப்போம் என தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு இபிஎஸ் தனிமையிலான அதிமுக அணி எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்த நிலையில், தவெக-வின் பலம் 107 ஆக குறைந்தது. மேலும் திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தவெக-வின் பலம் 106 ஆக குறைந்தது.
சற்று முன் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஜோசப் விஜய்.
தவெக அரசுக்கு ஆதரவு என காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உரையாற்றினார்.
காங்கிரஸ் 5, இந்தியன் கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2, விசிக 2 மற்றும் எம்எல்ஏ காமராஜ் 1 என தவெக-வின் பலம் போதுமான பெரும்பான்மையுடன் இருக்கிறது.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தது.
விசிக எம்எல்ஏ வன்னியரசு தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததோடு, 5 ஆண்டுகள் இந்த அரசு தொடர வேண்டும் எனவும் வாழ்த்தினார். அறிவியலை வளர்க்கும் திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏ-க்களும் தவெக-க்கு ஆதரவு அளித்தனர்.
அமமுக கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், 5 ஆண்டு காலம் முழுவதும் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார் என வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு என தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் விளாசினார்.
தமிழக அரசு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் எனவும், நம்பிக்கை தீர்மானத்தில் நடுநிலைத் தன்மையுடன் இருப்பதாக பாஜக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார்.
என்னுடைய பேரக் குழந்தைகள் வளர்ந்து வரும் போது மதுப்பழக்கமும், போதைப்பழக்கமும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. 717 மதுக்கடைகளை முதல்வர் விஜய் மூட உத்தரவிட்டிருப்பதை பாமக வரவேற்கிறது. இருப்பினும் ஒரு கடையை மூடினால் நான்கு சந்து கடைகள் பக்கத்தில் திறக்கப்படுவதை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து தடுக்க வேண்டும் என பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
.
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, மமக மற்றும் கொமதேக ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் ஆட்சி அமைய வேண்டும் என்றே பொதுமக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர் 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் அமைச்சரவையில் சிலர் இடம் தருவதாக ஆசை வார்த்தை கூறியிருப்பதால் மாற்றி வாக்களிப்பதை பேரவை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவெக அரசுக்கு எதிராக வாக்கு அளிக்கிறோம் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பிரபாகரன், எஸ்பி.வேலுமணியை பேச அழைத்த போது இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிவி.சண்முகம் மற்றும் வேலுமணி அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு.
3.27 கோடி பேர் அரசுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். 106 எம்எல்ஏ-க்களின் ஆதரவோடு மட்டுமே தவெக உள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளின் ஆதரவோடு தான் தற்போதைய அரசு அமைந்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவினர் தவெக-வுக்கு ஆதரவளித்துள்ளனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து திமுக எம்எல்ஏ-க்கள் விலகி வெளிநடப்பு செய்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஆதரவு மற்றும் எதிர்ப்பு பிடித்த கட்சிகளுக்கு முதல்வர் விஜய் நன்றியை தெரிவித்தார். முந்தைய கட்சிகள் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் அப்படியே தொடரும் என்ற வாக்குறுதியையும் அவர் அளித்துள்ளார். இந்த அரசு குதிரையை பேரத்தில் அல்ல; குதிரை வேகத்தில் செயல்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, பேரவையின் கதவுகள் மூடப்பட்டன.
தற்போது வரை 144 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். 22 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 5 பேர் தீர்மானத்தில் நடுநிலை வகித்தனர். 59 பேர் தீர்மானத்தில் பங்கேற்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்திருப்பதால், தவெக அரசு தொடர்ந்து ஆட்சி புரியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.