

கரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தவெக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் வியாழக்கிழமை அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாகவும், அவருடன் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தவெகவில் இணைவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பதவி விலகும் ஆறாவது எம் எல் ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆவார். இதற்கு முன்னதாக மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருந்தனர். ஏற்கனவே 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் 6வது எம்எல்ஏவாக இருப்பார். இவருடைய விலகலால் அதிமுகவின் சட்டப்பேரவை பலம் மேலும் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த முடிவு அரசியல் ரீதியாக அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த அடுத்தடுத்த ராஜினாமாக்கள் காரணமாக தமிழகத்தில் காலியாகும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், கரூர் தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆறு தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகளிலும் அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் காலியானது. இந்த நிலையில் மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
அதிமுகவில் இருந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியேறியதன் மூலம் சட்டசபையில் அக்கட்சி எம்எல்ஏக்களின் பலம் 47 இல் இருந்து 41 ஆகக் குறைந்து உள்ளது. இது அக்கட்சியுனுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமின்றி அனைத்து அதிமுகவினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெற உள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தவெகவில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.