இபிஎஸ் ஷாக்..! எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்..!

விராலிமலையில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் விலகல்; சி.வி.சண்முகத்தின் அடுத்த மூவ் என்ன?
சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்
Updated on

அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் தலைமையில் உருவான அதிருப்தி அணி, தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தது. இதனால் இபிஎஸ் இவர்களின் பதவிகளைப் பறிக்க, தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த பெரும்பாலான எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ்ஸிடமே திரும்பினர். இருப்பினும், பெருந்துறை, தாராபுரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், இபிஎஸ்ஸை தொடர்ந்து விமர்சித்து வந்த சி.விஜயபாஸ்கரும் தற்போது தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வழங்கியுள்ளார்.

கொறடா உத்தரவை மீறியதால் சி.விஜயபாஸ்கரின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்திருந்தார் இபிஎஸ். அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ்சுடன் இணைந்த போதும் விஜயபாஸ்கர் தனியாக செயல்பட்டு வந்தார்.சி.விஜயபாஸ்கரின் இந்த திடீர் முடிவை சபாநாயகர் முறைப்படி ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் மற்றொரு முக்கிய அதிருப்தி தலைவரான சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த அதிருப்தி எம்எல்ஏக்களின் விலகல் மற்றும் ராஜினாமாக்கள் காரணமாக, சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் தற்போது 42 ஆக சரிந்துள்ளதுடன், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கரும் விலகியிருப்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

C. Vijayabaskar
C. Vijayabaskarimage credit-newstodaynet.com

யார் இந்த விஜயபாஸ்கர்?

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது அரசியல் பயணத்தை 2001-ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்எல்ஏ-வாகத் தொடங்கினார். 2006 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும், 2011 முதல் 2026 வரை நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் விராலிமலை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றிகளை வாரிக்குவித்தார். குறிப்பாக, கடந்த 2026 தேர்தலில் விராலிமலையில் தவெக வேட்பாளரை 62,073 வாக்குகள் என்ற பிரம்மாண்ட வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 2013-ல் முதன்முறையாக அமைச்சரான இவர், 2016-லும் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இபிஎஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், தமிழகத்தை உலுக்கிய கொரோனா பேரிடர் நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இவர் ஆற்றிய தீவிரக் களப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் அரசியல் எல்லைகளைத் தாண்டி பரவலான பாராட்டுகளைப் பெற்றன.

தற்போது இபிஎஸ்ஸுடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக, விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். தமிழக அரசியலில் நிலவிவரும் அதிரடி மாற்றங்களுக்கு இடையே, ஏற்கனவே அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது சி.விஜயபாஸ்கரும் விலகியுள்ளதால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக இருந்த 5 சட்டமன்றத் தொகுதிகளுடன் இணைந்து, தற்போது 6-வதாக விராலிமலை தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! அண்ணாமலை இயக்கத்தில் இணைகிறாரா ரஜினியின் மருமகன் விசாகன்..?
சி.விஜயபாஸ்கர்
logo
Kalki Online
kalkionline.com