

பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அதில் பல்வேறு பிரபலங்களும், இளைஞர்களும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி அண்ணாமலை புதிய இயக்கத்தில் இணையப் போவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டசபை தேர்தல் நடந்த முடிந்த பிறகு தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் உட்கட்சி மோதல்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேகவேகமாக அதிமுகவிலிருந்து விலகி மாற்று கட்சிகளை தேடி வருவது மட்டுமின்றி பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' (We The Leaders)மக்கள் இயக்கம், தற்போது தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தான் அதிரடி திருப்பமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனும், பிரபல தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி, அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவருக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி தொடங்கிய இந்த இயக்கம், குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதுவரை (ஜூன் 10-ம்தேதி நிலவரப்படி)சுமார் 17 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ள இந்த இயக்கத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் 'ஜென்-இசட்' (Gen-Z) இளைஞர்கள் என்பது இதன் கூடுதல் பலம். தற்போது ரஜினிகாந்த் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வருகையால் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்மாதம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்திவிட்டு, அதன்பிறகு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகள் முடுக்கி விடப்படவுள்ளன. அதுமட்டுமின்றி அண்ணாமலை உடன் இணைய பாஜகவில் இருந்து பலர் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.
விசாகன் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகச் செயல்பட்டு வரும் தொழிலதிபர். இத்தகைய கார்ப்பரேட் பின்னணி கொண்ட, படித்த மற்றும் வசதி படைத்த ஒருவர், அரசியலில் சாதாரண உறுப்பினராக இணைய ஆர்வம் காட்டுவது, தமிழக அரசியலின் முதிர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன், அரசியலில் மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறையினருக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் முதலமைச்சர் விஜய் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட அதிமுக, திமுக என்ற இரு திராவிட கட்சிகளும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் மூத்தவர்களே ஆளுமையில் இருக்கும் நிலையில் தவெக என்ற புதிதாக கட்சியை தொடங்கிய விஜய் தேர்தலில் இளம் தலைமுறையினரை களத்தில் இறக்கி சட்டசபை தேர்தலில் வெற்றியும் கண்டு வரலாற்று சாதனை படைத்தார்.
இதனை கண்ட பல இளம் தலைமுறையினருக்கும் தற்போது அரசியலில் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் அண்ணாமலையின் தொலைநோக்கு பார்வைக்கு, விசாகன் போன்றவர்களின் வருகை கூடுதல் பலத்தையும், இயக்கத்திற்கு நம்பகத்தன்மையையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இளைஞர்கள் மற்றும் படித்த வல்லுநர்களை அரசியலில் ஈர்க்க வேண்டும் என்ற அண்ணாமலையின் தொலைநோக்கு பார்வைக்கு விசாகன் சரியான பொருத்தம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதுமட்டுமின்றி முதலமைச்சர் விஜய் போன்று சமூக ஊடகங்கள் மூலம் குறைந்த செலவில் பிரச்சாரம் செய்யும் முறையைப் பின்பற்றி வரும் அண்ணாமலை, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, பணம் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அதன்படி விசாகன், அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், தமிழக அரசியலில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை ஈர்க்கும் ஒரு சக்தியாகவும் 'வி தி லீடர்ஸ்' உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்திருந்த நிலையில் தனது மாமியாரின் இயக்கத்தில் இணையாமல் அண்ணாமலை இயக்கத்தில் இணைய விரும்புவது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதவிர நடிகர் ராகவா லாரன்ஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று காலை அறிவிப்பதாக இருந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் ஒருநாள் தள்ளி போட்டிருக்கிறார். எனவே அவர் 12-ம்தேதி தனது முடிவை அறிவிப்பார் என தெரிகிறது.
அதாவது வரும் இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவிற்கு சார்பில் போட்டியிட போகிறாரா அல்லது அண்ணாமலை இயக்கத்தில் சேர்த்து அந்த இயக்கம் கட்சியாக மாறியதும் அதன் பிறகு தேர்தலில் களத்தில் இறங்க போகிறாரா என்பது நாளை தெரியவரும்.
இப்படி தமிழக அரசியலில் தினம் தினம் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.