

தமிழக அரசியல் களத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகள், பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது வருகையை ஆணித்தனமாக பதிக்க தவெக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப தவெக பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தற்போது தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், அரசியல் களம் தீப்பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிவையில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய 2 கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக மற்றும் தவெக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், விரைவில் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது தவிர திமுக நிர்வாகிகள் கூட தவெக-வில் இணையவிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் சுதீஷ், நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேப்டன் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜைக்கான அழைப்பிதழை கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு அதிமுக - தேமுதிக கூட்டணியை வலுப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் சூழலில், விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜை விழா நாளை மறுதினம் டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து தேமுதிக பொருளாளர் சுதீஷ் அழைப்பிதழை வழங்கினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக நாங்கள் இதுவும் பேசவில்லை என்றும், குருபூஜைக்கான அழைப்பிதழ் மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜை முடிந்த பிறகு கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி திமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான தகவல்களை தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பான ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாஜக மற்றும் பாமகவிற்கு தலா 20 இடங்கள், தேமுதிகவிற்கு 6 இடங்கள் என அதிமுக தரப்பில் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தேமுதிக-விற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற வதந்தியை பரப்பியது யாராக இருந்தாலும், அழிவுப் பாதைக்கு செல்வது உறுதி என பிரேமலதா ஆவேசமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது இன்னும் முடிவாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் அதிக தொகுதிகளை வழங்கும் கட்சியோடு கூட்டணி வைக்க தேமுதிக முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஜனவரி 9-ல் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் எதிர்பார்க்கலாம்.
மேலும் பாமக-வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆகையால் யாரும் கூட்டணி தெடர்பாக பாமக-வை இன்னும் அணுகவில்லை என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய 2 கட்சிகளை தங்களுடன் இணைத்து கூட்டணியை பலப்படுத்தப் போவது தவெகா-வா அல்லது அதிமுக-வா என்பது புத்தாண்டிற்கு பிறகு தான் தெரிய வரும்.