
சினிமாவில் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு, அப்படத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த டிரெய்லர் வெளியிடப்படுவது வழக்கம். படத்தில் வரும் சிறந்த காட்சிகள் மற்றும் பின்னணி இசையைக் கொண்டு டிரெய்லர் உருவாக்கப்படும். தற்போதைய காலகட்டத்தில் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பே முதல் காட்சி, இரண்டாம் காட்சி மற்றும் டீஸர் என பலவற்றை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்கிறார்கள்.
ஆனால் அப்படியே ஒரு 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், படம் வெளியாவதற்கு முன்பு ஒரே ஒரு டிரெய்லர் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. அவ்வகையில் தமிழ் சினிமாவில் முதன்முதலில் டிரெய்லர் வெளியான திரைப்படம் எதுவென தெரியுமா?
ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமான காட்சிகளைத் தொகுத்து 2 முதல் 3 நிமிடங்கள் வரையிலான கால அளவில் டிரெய்லர் உருவாக்கப்படுகிறது. பொதுவாக சமூக வலைதளங்கள் மற்றும் தியேட்டர்களில் டிரெய்லர் வெளியாவது வழக்கம். திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து, விளம்பரப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக டிரெய்லர் பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பட முன்னோட்டம் எனப்படும் டிரெய்லரை முதன்முதலில் உருவாக்கியவர் 17 வயதே ஆன இளம் இசையமைப்பாளர். அதுவும் அவர் தனது முதல் படத்திலேயே டிரெய்லரை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறு யாரும் இல்லை இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமான யுவன் சங்கர் ராஜா தான். 1997 ஆம் ஆண்டு டி.நாகராஜன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகவும் இளவயது இசையமைப்பாளர் இவர் தான். 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணி படுகொலையில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் தான் அரவிந்தன்.
தனது தாயாரின் அறிவுரையை ஏற்று, இசையை தனது தொழிலாக ஏற்றுக் கொண்டார் யுவன். பிறகு சில ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தார். அரவிந்தன் படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா யுவனின் ஆல்பம் பாடல்களைக் கேட்ட பிறகு, படத்தின் சில காட்சிகளைத் தொகுத்து ஒரு சிறிய இசையை உருவாக்கச் சொன்னார். அந்த சிறிய வயதிலேயே தயாரிப்பாளர் விரும்பும் அளவிற்கு டிரெய்லர் இசையை உருவாக்கினார் யுவன். இந்த இசை தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகவே, படத்திற்கு இசையமைக்கும் முழு பொறுப்பையும் யுவனுக்கே வழங்கி விட்டார். இதுதான் தமிழ் சினிமாவில் முதன்முதலில் வெளியான டிரெய்லர்.
இதற்குப் பிறகு தான் அடுத்தடுத்து வந்த மற்ற படங்களும் டிரெய்லரை உருவாக்கி விளம்பரப்படுத்தத் தொடங்கினர். இப்படம் வசூல் ரீதியாக தோல்வியைச் சந்தித்து இருந்தாலும், யுவனின் இசைக்கு நேர்மறை விமர்சனங்களே வந்தன.
இசையைக் கற்றுக் கொள்ள எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளாத யுவன், இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தை மாற்றி, தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து விட்டார். அயாராத உழௌப்பு மற்றும் இளம் தலைமுறை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு தான் யுவனின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.