
மும்பை மற்றும் டெல்லியை விமான நிலையங்களைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஏர் இந்தியா விமானச்சேவை நிறுவனம் 1932-ல் தொடங்கப்பட்டது. மேலும், குறைந்த கட்டண விமானச் சேவைகளை வழங்கும் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ இதன் ஒரு துணை நிறுவனமாகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேரளா மாநிலத்தினை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. தற்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு சுமார் 100 விமானங்களை இயக்குகிறது. இதில் தென்னிந்தியாவின் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்றவற்றிலிருந்து செல்லும் விமானங்கள் முக்கியமானவை.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அக்டோபர் மாதம் வரும் தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி சென்னை - பெங்களூர் உள்ளிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றாலே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என்றாலும், மறுபுறம் வேலை மற்றும் கல்வி போன்ற காரணங்களால் வெவ்வேறு ஊர்களில் தங்கியிருப்பவர்கள் தீபாவளி விடுமுறையை தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரெயில், பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் பயணித்து வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லுவோருக்கான சிறப்பு ரெயில்கள் மற்றும் பேருந்துகளிலும் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, உள்நாட்டு விமானங்களில் பயணிக்க குறைந்த பட்சமாக ரூ.1,200 ஆக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. சர்வதேச விமானங்களில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,724 ஆக நிர்ணயம் செய்துள்ளது. செப்டம்பர் 28-ம்தேதியில் இருந்து அக்டோபர் 1-ம்தேதி வரை 4 நாட்கள் முன்பதிவு செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்த பயணிகள் சலுகை கட்டண டிக்கெட்களை அக்டோபர் 12-ம்தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.