இந்த முறை கனடா செல்வதற்கு, ஏர் இந்தியா விமானத்தில் சென்னை-டெல்லி-டொராண்டோ என்று பயணச் சீட்டு எடுத்திருந்தேன். ஜூன் மாதப் பயணத்திற்கு ஒரு மாதம் முன்னாகவே பயணச் சீட்டு பதிவு செய்திருந்தோம். டெல்லியிலிருந்து, டொரோண்டோவிற்கு எங்கும் நிற்காமல் 14 மணி நேரம், 30 நிமிடங்கள் நேரடிப் பயணம்.
சென்னையிலிருந்து ஐரோப்பா, அமெரிக்க கண்டத்திற்கு சேவை செய்யும் விமான நிறுவனங்கள், நடுவில் மத்திய ஆசியாவில் இறங்கி, மற்றொரு விமானத்தில் ஏறிச் செல்லும் படி சேவைகள் அமைத்துள்ளார்கள். இதில் நாம் கையில் இருக்கும் உடைமைகளுடன் விமானத்திலிருந்து இறங்கி, அடுத்த விமானம் கிளம்பும் இடத்திற்குச் செல்ல வேண்டும். மற்றுமொரு பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ள வேண்டி வரும். விமான நிலைய சக்கர நாற்காலி சேவை எடுத்துக் கொண்டால், உதவிக்கு வருவார்கள். ஆனால், நேரடிப் பயணம் என்றால், இறங்கி ஏறும் தொல்லை இல்லை. ஆகவே, நேரடிப் பயணம் நல்லது என்று முடிவெடுத்தோம்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளி முடக்கப்பட, பயண நேரம் அதிகரிக்கும் என்று ஏர் இந்தியா அறிவித்தது. இதனிடையில், இரான், இஸ்ரேல் போர் ஆரம்பிக்க, விமானம் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கும் என்று அறிவித்த விமான நிறுவனம், பயணம் ஆரம்பிக்கும் நேரத்தை முன் கூட்டி, மொத்தப் பயண நேரம் 18 மணி, 20 நிமிடங்கள் என்று அறிவித்தது.
டெல்லி-டொராண்டோ பயணம் டெல்லி-வியன்னா-டொராண்டோ என்று மாறியது. பயண நேரம் அதிகரித்துள்ள காரணத்தால், விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வியன்னாவில் நிறுத்தப்படும் என்றும், பயணிகள் விமானத்திலிருந்து இறங்க வேண்டிய தேவையில்லை எனவும் விவரம் அளித்தது.
ஜூன் 12ஆம் தேதி நடந்த ஏர் இந்தியா விபத்திற்குப் பிறகு தொலைக்காட்சியிலும், செய்திகளிலும், ஊடகங்களிலும், வாட்ஸ் அப் போன்ற செயலிகளிலும் அதைப் பற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் வந்த வண்ணமிருந்தன. ஏர் இந்தியாவில் போக வேண்டாம் என்ற அறிவுரைகள் கொடுக்கப்பட்டன. நான் புறப்படும் வரை, எந்த விமானத்தில் பயணம் செய்யப் போகிறேன் என்பதை முடிந்த வரை மற்றவர்களிடம் சொல்லவில்லை. நம்முடைய நன்மைக்கு சொல்வதாக நினைத்து நம்மைப் பயமுறுத்துகிறார்கள் என்று தோன்றியது.
இதனிடையில் ஏர் இந்தியாவின் பல விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன. ஏர் இந்தியா டெல்லியிலிருந்து டொராண்டோவிற்கு வாரத்தில் 13 பயணச் சேவை செய்து கொண்டிருந்ததை, ஏழாகக் குறைத்தது. நம்முடைய பயணம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கவலை, கிளம்பும் நாள் வரை மனதை அரித்துக் கொண்டிருந்தது. சேவைகள் நிறுத்தம் விமானங்களில் உள்ள குறைபாடினாலா என்ற அச்சம் ஏற்பட்டது. விமானங்களின் பயண நேரம் அதிகரித்த காரணத்தால், சேவைகளை குறைக்க வேண்டி வந்தது என்று விளக்கியது நிறுவனம். உதாரணத்திற்கு டெல்லியிலிருந்து பாரிஸ் செல்லும் விமானம், அங்கு சென்ற பின், விமானம் பரிசோதனை செய்யப்பட்டு, சுத்தம் செய்த பின்னர், பாரிஸ் டெல்லி பயணமாக இயக்கப்படுகிறது. இதில் பயண நேரம் அதிகரிக்கும் போது, மறுபடி இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சென்னை டெல்லி விமானம், மூன்று மணி நேரம் முன்னதாகக் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டு குறித்த நேரத்தில் கிளம்பியது. இந்த விமானத்தில், குறிப்பிடும்படியான குறை இருக்கவில்லை. இரவு உணவு நன்றாக இருந்தது. ஆனால், உணவின் அளவு போதாது என்று சில பயணிகள் கருதினர்.
டெல்லி டொராண்டோ விமானம் சற்று தாமதமாகக் கிளம்பியது. விமானத்தில் காலி இருக்கைகள் இருக்கவில்லை. விமானத்தில் சில குறைகள் இருந்தன.பயணிகளின் இருக்கைக்கு முன்னால் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி பெருவாரியான இருக்கைகளில் வேலை செய்யவில்லை.
அதை இயக்க வைக்கப்பட்டிருந்த ரிமோட் வேலை செய்யவில்லை. உணவிற்காக பொருத்தப்பட்டிருந்த ட்ரே சரியாக இருக்கவில்லை. ஆனால், உணவு தரமானதாக இருந்தது. டெல்லி, டொராண்டோ பயணத்தில் உணவிற்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று ஆறு முறை உணவு பரிமாறப்பட்டது. விமானப் பணியாளர்கள் சேவை சிறப்பாக இருந்தது. விமானம் மூன்று மணி நேரம் தாமதமாக டொரான்டோ சென்றடைந்தது.
ஏர் இந்தியா விமானத்தின், விமானங்கள் மற்றும் சேவை பற்றிப் பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், அதில் பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகம். 2023 ஆம் ஆண்டு, 70 மில்லியன் பயணிகள் இந்தியாவில், அயல் நாட்டுப் பயணம் மேற்கொண்டனர். இந்திய விமான சேவையில் 23.6 சதவிகிதத்துடன் முதலிடம் வகிப்பது, ஏர் இந்தியா.
பெருவாரியானப் பயணிகள் ஏர் இந்தியாவில் பயணிப்பதற்கு முக்கிய காரணங்களாக நான் கருதுவது :
1. வட மாநிலங்களிலிருந்து ஐரோப்பா, வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு, ஏர் இந்தியா, நேரடி சேவை செய்கிறார்கள். இதனால், நடுவில் இறங்கி, வேறொரு விமானம் ஏறும் தொல்லையில்லை. இதனால், தனியாகப் பயணிக்கும் பெரிசுகளுக்கு இது சௌகரியமாக உள்ளது.
2. இளசுகள் துணையில்லாமல் பெரிசுகள் அதிகமாகப் பயணிப்பதால், இந்தி பேசும் பணிப்பெண்களிடம் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு விவரம் அறிந்து கொள்ள முடிகிறது. இது அன்னிய நாட்டு விமானத்தில் கடினம்.
3. பயணிகளுக்கு அளிக்கும் உணவு, நம் நாட்டு உணவு என்பதால் ஏர் இந்தியாவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அன்னிய நாட்டவர் நடத்தும் விமான சேவைகளில், உணவு நாம் எதிர்பார்ப்பது போல இருப்பதில்லை.
ஏர் இந்தியா விமானத்திலுள்ள குறைகள், எளிதில் தீர்க்கப்படக் கூடியவை. வருடத்திற்கு, 15 முதல் 20 சதவிகிதம் அயல்நாடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆகவே, தரமான விமான சேவையை குறிக்கோளாகக் கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்வது நமது நாட்டிற்குப் பெருமை தரும்.