
விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் விமான கட்டணம் மிக அதிகம் என்பதால் நடுத்தர மக்களுக்கு விமான பயணம் என்பது ஒருகனவாக மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) அனைத்து தரமக்களும் பயன்பெறும் வகையில் குறைத்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் பொருட்டு மெகா சலுகைகளை அறிவித்திருப்பது விமானத்தில் பறக்க ஆசைப்படும் மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மெகா சலுகையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனம் அறிவித்துள்ளது. ‘Freedom Sale’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை பயன்படுத்திகொள்ளும் பயணிகள் பேருந்து கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பாகும். அதுவும் பண்டிகை கால கட்டத்தில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் மொபைல் செயலி வாயிலாக டிக்கெட் புக் செய்யு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தமாக 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் வழங்கும் விமான நிறுவனம் உள்நாட்டு விமானங்களுக்கு டிக்கெட் சலுகை கட்டணம் ரூ.1,279-ல் இருந்தும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் சலுகை விலை ரூ. 4,279-ல் இருந்து தொடங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 19-ம் தேதியில் இருந்து அடுத்தாண்டு (2026)மார்ச் 31, வரை தொடரும் எனவும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக்கெட் சலுகை மட்டுமின்றி பயணிகள், தங்களுடைய லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு சலுகைகளை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் செக் இன் லக்கேஜ் இல்லாமல் எக்ஸ்பிரஸ் லைட் என்ற சலுகை டிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த டிக்கெட்டின் விலை உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.1,279-ல் இருந்தும் சர்வதேச விமானங்களுக்கு ரூ.4,279 முதல் தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் செகுசு பயணத்தை விரும்பும் பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் பிஸ் (Xpress Biz) என்ற பிரீமியம் கேபின் என்கிற 58 இன்ச் வரை சீட் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த வசதி அண்மையில் ஏர் இந்தியாவில் இணைக்கப்பட்ட 40 புதிய விமானங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் லாயல்டி புரோகிராம் மெம்பர்களுக்கு எக்ஸ்பிரஸ் Biz கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடி மற்றும் கூடுதல் பேக்கேஜ் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியுடன் 'Gourmair' பிராண்டட் மீல்ஸ், மற்றும் சீட் தேர்வு இ முன்னுரிமை சேவைகள் மற்றும் அப்கிரேடுகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், ஆயுதப்படை வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ஓணம் பண்டிகை, நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல், குடியரசு தினம் என தொடர்ந்து பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் இந்த சலுகை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 116 விமானங்களுடன் தினமும் 500க்கும் மேற்பட்ட விமான சேவையை வழங்கி வருகிறது. 38 உள்நாட்டு நகரங்கள் மற்றும் 17 வெளிநாடுகளை இணைக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.