

நடிகர் அஜித்குமார் கால் நூற்றாண்டு காலத்தையும் கடந்து தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். நீண்ட நெடும் காலமாக , எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கிறார், தன் ரசிகர் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் மன்றங்களைக் கூட கலைத்துள்ளார். இது போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் நடிகர் என்று அஜித்தை குறிப்பிடுவது வழக்கம். நேற்றைய தினம் இத்தாலியில் அஜித் ஜென்டில்மேன் டிரைவர் விருதைப் பெற்றுள்ளார். இது பற்றி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் , 2025 ஆம் ஆண்டிற்கான 'ஜென்டில்மேன் டிரைவர் ' விருது , நடிகர் அஜித்திற்கு பிலிப் சார்ரியல் மோட்டார்ஸ்போர்ட் குழுமத்தால் வழங்கப்பட்டது. இந்த உயரிய கௌரவம் போட்டியில் வெற்றி பெறுவதற்காக வழங்கடவில்லை மாறாக , மோட்டார் ஸ்போர்ட்டில் வீரர்களின் அர்ப்பணிப்பு, விளையாட்டு உணர்வு மற்றும் ஒழுக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அஜித் பெற்றுள்ளார்.
திரைத்துறையில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் ஒரு நடிகர் விளையாட்டுத் துறையில் அங்கீகாரம் பெறுவது ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அஜித் விருது பெற்ற செய்தி வெளியானவுடன் அவரது ரசிகர்களும், ரேஸ் பிரியர்களும் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் ஓட்டுநர் திறன், ஒழுக்கம் மற்றும் நிலையான முன்னேற்றம் ஆகியவை அவரை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தியுள்ளன என்பது போன்ற கருத்துகள் சமூக வலைத் தளங்களில் பகிரப்படுகின்றன.
ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் மனைவி் நடிகை ஷாலினி பகிர்ந்துள்ளார். அதில் "வெனிஸில் எனது கணவர் இந்த விருதைப் பெறும்போது அவருடன் நிற்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. பிலிப் சாரியேலின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது அஜித்தின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு மைல்கல்" என்று ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் ஷாலினி, அஜித்தின் சாதனையை ஒரு குடும்பமாக கொண்டாடும் தருணங்களைப் கொண்ட, குடும்பத்துடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களில் அவை இணையத்தில் வைரலாகின. ரசிகர்கள் அஜித் - ஷாலினியை எல்லா நேரத்திலும் சிறந்த ஜோடி என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது பற்றி அஜித் குமார் பேசுகையில் "இந்த மரியாதைக்குரிய விருது எனக்கு மிகவும் முக்கியமானது. மோட்டார் ஸ்போர்ட் உலகில் எனது பயணம் சவாலானது, அதே நேரத்தில் சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு சவாலும் என்னை ஒரு சிறந்த வீரராக மாற்றியது. நான் கேள்விப்பட்டவரை பிலிப் சாரியல் பற்றிய அனைத்து செய்திகளும் நல்ல விதமானவை. அவர் மிகவும் அன்பான மனிதர் மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு சிறந்த மனிதர்" என்று அவர் குறிப்பிட்டார். ஜென்டில்மேன் டிரைவர் விருதைப் பெற்ற பின்னர் அஜித் நன்றி தெரிவித்தார்.
அஜித் சொந்தமாக ஒரு கார் பந்தய அணி வைத்துள்ளார். 2025 முதல் சர்வதேச பந்தயங்களில் போட்டியிட்ட அவரது அணி, 24 மணி நேர மற்றும் 12 மணி நேர பந்தயங்களில் ஏற்கெனவே பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.