

மும்பையில் இருந்து பாராமதிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் தரையிறங்கும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் மற்றும் அவருடன் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கு போதிய வெளிச்சம் இன்மையே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், விபத்தில் சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை தேவை என்றும் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தாங்கள் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் தான் வசிப்பதாகவும், அவர்களின் இருப்பிடங்களுக்கு பின்னால்தான் விமான ஒடுபாதை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
விமான ஓடு பாதையில் ஒரு விமானம் வந்ததாகவும் தரையிறங்க முயன்றதையும் கண்டதாகவும் கூறினார். ஆனால் அந்த விமானம் தரையிறங்காமல் மேலே எழும்பி பறந்து சென்றது என்றும், பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறங்க முற்பட்டது. அதன் பின்னர் ஓடு பாதைக்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளானது என்றும் தெரிவித்துள்ளார். அதைக் கண்டதும் அவர்கள் ஓடு பாதையை சுற்றியுள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக போலீசாரும் மற்றவர்களும் அங்கே ஓடி வந்து பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் 15 நிமிடங்களுக்கு பின்னரே தீயை அணைக்க முடிந்தது என்றும் கூறினார்.
மேலும் அப்பெண் கூறியதாவது:
நாங்கள் அருகில் சென்ற போது தலையில்லாத ஒரு சடலம் கிடந்ததைக் கண்டோம். அது முற்றிலும் எரிந்து சிதைந்து போயிருந்தது. அதை எங்களால் அடையாளம் காண முடியவில்லை. அந்த சடலத்தின் கையில் இருந்த பொருளைக் கண்டு(வாட்ச்) அடையாளம் கண்டு கொண்டோம். நாங்கள் அதை தாதாவின் (அஜித் பவாரை ஊர் மக்கள் தாதா என்று தான் பிரியமாக அழைப்பது வழக்கம்) உடல் என்பதை அடையாளம் கண்டோம். போலீசார் சடலத்தை மூடுவதற்கு துணிகளையும், தண்ணீரும் கேட்டனர். நாங்கள் எங்கள் வீட்டில் இருந்த புதிய போர்வை ஒன்றே கொடுத்தோம் என்று அப்பெண் கூறியுள்ளார்.