

ஜனவரி 28 , இன்று காலையில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் உயிரிழந்தார். தனது சொந்த ஊரான பராமதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பயணம் மேற்கொண்ட அவர் , விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக , விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அஜித் பவார் மட்டுமல்ல இந்தியாவில் பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இதுபோன்று விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு பார்வை.
1.ஹோமி ஜஹாங்கீர் பாபா (1966)
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா , இவர் இந்தியாவை அணுசக்தி மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்று லட்சியத்தை கொண்டவர். அதற்காக அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். ஜனவரி 24, 1966 அன்று இவர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி எல்லையில் உள்ள மவுண்ட் பிளாங்க் மலைத்தொடரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் இந்தியாவின் முக்கிய ஹோமி பாபா உயிரிழந்தார் . இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய சதி இருக்கிறதா ? என்ற சந்தேகம் இன்றும் உண்டு.
2.சுரேந்திரமோகன் குமாரமங்கலம்(1973)
புகழ்பெற்ற அரசியல் குடும்பப் பின்னணியை கொண்ட சுரேந்திரமோகன் குமாரமங்கலம் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய மந்திரியாக பதவி வகித்தவர். 1973-ம் ஆண்டு மே 31-ந் தேதி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
3. சஞ்சய் காந்தி (1980)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாகவும் , காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும் கருதப்பட்டவர் சஞ்சய் காந்தி. அடிக்கடி விமான சாகசத்தில் ஈடுபடுவதை பொழுது போக்காக கொண்ட இவர். 1980-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி, டெல்லியில் விமான சாகசத்தில் ஈடுபட்டபோது , அது விபத்தில் சிக்க உயிரிழந்தார். நாட்டை உலுக்கிய சஞ்சய் காந்தியின் மரணம் இன்றளவும் சந்தேகத்திற்கு இடமான வகையில் மக்களால் பேசப்படுகிறது.
4.மாதவராவ் சிந்தியா (2001)
காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் பாரம்பரிய அரச குடும்பத்தில் பிறந்தவராகவும் மாதவராவ் சிந்தியா அரசியலில் புகழ்பெற்று இருந்தார். செப்டம்பர் 30, 2001 அன்று உத்தரப் பிரதேசத்தின் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார்.
5.ஜி. எம். சி. பாலயோகி (2002):
முன்னாள் சபாநாயகராக பதவி வகித்த பாலயோகி , ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மார்ச் 3, 2002 அன்று உயிரிழந்தார்.
6. சவுந்தர்யா (2004)
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த சவுந்தர்யா , பாஜகவில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி , பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்த அவர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இந்த விபத்துக்கு பின்னாலும் சவுந்தர்யா உயிருடன் இருப்பதாகவும் ஆந்திராவில் பலவித கதைகள் சொல்லப்படுகிறது.
7. ஓ.பி.ஜிண்டால் ,சுரேந்தர் சிங்(2005)
ஹரியானா மாநிலத்தின் மின்துறை மந்திரியான ஓ.பி.ஜிண்டால் , வேளாண் மந்திரி சுரேந்தர் சிங் ஆகியோர் 2005 மார்ச் மாதம் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நடந்த விபத்தில் பலியாகினர்.
8.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி (2009)
ஆந்திர மாநிலத்தில் முதல்வரான
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு செப் 2-ந் தேதி ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது நல்லமலா காட்டுப்படுதியில் ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதன் பிறகு பல அரசியல்வாதிகள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யவே பயந்தனர்.
9. டோர்ஜி காண்டு (2011)
அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருந்த டோர்ஜி காண்டு தவாங் பகுதியில், 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.
10. தருணி சச்ச்தேவ் (2012)
ரஸ்னா விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்று , சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தருணி ,
மே 14, 2012 அன்று நேபாளத்தில் நடந்த அக்னி ஏர் விமான விபத்தில் உயிரிழந்தார்.
11.ஜெனரல் பிபின் ராவத் (2021):
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத், டிசம்பர் 8, 2021 அன்று குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார். நாட்டையே உலுக்கிய இந்த விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
12. விஜய் ரூபானி (2025)
குஜராத் மாநில முன்னாள் முதல்வரான விஜய் ரூபானி கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி, அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.இந்த விமானம் புறப்படும் போதே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர , விஜய் ரூபானி உள்பட அனைவரும் பலியாகினர்.