

தமிழக சட்டசபை கடந்த மாதம் 5-ம்தேதி பட்ஜெட்டி உரையுடன் தொடங்கியது. தினமும் நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று புதன்கிழமை பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
கருத்துரிமை, போராட்ட உரிமையை தவெக அரசு உறுதி செய்கிறது. கால தாதமம், ஆவணங்கள் மாயம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த திமுக ஆட்சியில் வாழ்வாதாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியின் போது போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டி பேசிய போது திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் அமளியில் ஈடுபட்ட திமுகவினரை அமைதியாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், மனிதநேயமற்ற வகையில் விவசாயிகள் மீது கடந்த திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறினார். மேலும் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனித நேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
தவெக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும், விவசாயிகள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியாக கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுவதோடு சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் மேசையை தட்டி வரவேற்றனர்.