மாலத்தீவிலிருந்து அனைத்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றம்!

Indian Troops
Indian Troops

மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டுமென்பதே மாலத்தீவு அதிபரின் முதல் குறிக்கோளாக இருந்து வந்தது. அந்தவகையில் சென்ற ஆண்டு முதல் இதற்கான வேலைகளில் ஈடுப்பட்டு வந்த முய்சு, தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார். மாலத்தீவிலிருக்கும் அனைத்து இந்திய ராணுவ வீரர்களும் தற்போது அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மாலத்தீவிற்கு சில விமானங்கள் கொடுத்தது. அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனைப் பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டார். அவர் பதவியேற்றவுடன் முதன்முதலில் கூறியது, அனைத்து இந்திய படைகளும் வெளியேற வேண்டுமென்றுதான். மூய்சுவின் தேர்தல் பிரச்சாரம் கூட மாலத்தீவில் இந்திய செல்வாக்கைக் குறைப்பது பற்றித்தான் அதிகம் இருந்தது.

முய்சு அதிபரான பின்னர், சீன பயணம் சென்றார். ஆகையால், இவர் சீனாவின் பேச்சைக் கேட்டுதான் முடிவெடுக்கிறார். அந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் உறவை கொஞ்சம் கொஞ்சமாக முறிக்கவுள்ளார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “இந்திய ஆதரவு என்பதை மாற்றி சீன ஆதரவு நிலைப்பாடு என்பதை நோக்கி மாலத்தீவு நகரும். நான் ஆட்சிக்கு வந்தால், இந்திய ராணுவ வீரர்கள் நமது மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்" என்று பேசினார். அதன்மூலம் இவரின் நோக்கம் வெட்ட வெளிச்சமாகத் தெரிய வந்தது.

அவர் சென்ற ஆண்டு பதவியேற்றத்திலிருந்து சொல்லப்பட்டு வந்த இந்த விஷயம் தற்போது நிறைவேறியுள்ளது. மே 10ம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் தற்போது அனைத்து வீரர்களும் இந்தியா திரும்பினர். இவர்களுக்கு பதிலாக இந்தியா கொடுத்துள்ள விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் பராமரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மாலத்தீவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலிலிருந்த ஐந்து இந்திய மாலுமிகள் விடுவிப்பு!
Indian Troops

மேலும் இந்தியாவுடனான Hydrographic survey எனப்படும் மாலத்தீவில் உள்ள பாறைகள், மலைகள், நீர்நிலைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள், அலை அளவுகள் ஆகியவற்றின் ஆய்வின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்தது. இந்த ஒப்பந்தம் 2018ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல் மாலத்தீவு, சீனாவின் உளவு கப்பலை மாலத்தீவில் நுழைய தொடர்ந்து அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com