

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணியை பலப்படுத்த இரு கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய கட்சியாக முதல் தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
தவெக-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில் திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணையுமா என்ற சந்தேகங்கம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்று பிரச்சினையில் சிக்கி, இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சியினரும்ஔ ராகுல் காந்தியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தெரிவித்து வந்தனர். மேலும் தவெக உடன் கூட்டணி வைக்க தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் நாளை டெல்லியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை பொறுப்பேற்றதில் இருந்து, அக்கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் மிகப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க வேண்டிய சரியான தருணம் இதுதான் என ஏற்கனவே காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தவெக உடன் கூட்டணி என்பது, காங்கிரஸ் கட்சிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் திமுகவில் இருந்து காங்கிரஸ் பிரியுமா என்ற மிகப்பெரிய கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும் என்றே தெரிகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால் இதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசி வரும் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைப்பதே, சிறப்பாக இருக்கும் நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாளை (ஜனவரி 17) சனிக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதைப் பற்றித் தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.