

பாஜக மாநில செயலாளரும், அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளருமான அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைகிறார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி தனது புதிய அரசியல் இயக்கமான "இது நம்ம இயக்கம்" என்ற அமைப்பை தொடங்கினார். இவரது அரசியல் இயக்கத்தில், பலதரப்பட்ட மக்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களாகவும், தன்னார்வலர்களாகவும் இணையத்தளம் மற்றும் செயலி வழியாக இணைந்து வருகின்றனர். அண்ணாமலையின் புதிய இயக்கம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே தமிழகம் முழுவதும் பிரபலமானது.தற்போது வரை 17 லட்சத்து 27 ஆயிரத்து 864 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.பாஜவின் முக்கிய நிர்வாகிகளும் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜ இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
''ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருக்கிறது என்றால், தமிழக பாஜ 4,5 பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தோல்வி அடைந்தாலும் அவர்களே தான் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்'' என அமர் பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.அவரது இந்த கருத்து தமிழக பாஜக வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே தமிழக பா.ஜ.க.வின் மாநில தலைவராக உயர்ந்த அவர், கடந்த ஆண்டு அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தனக்கு போட்டியிட சீட் வேண்டாம் என்று அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் தனியாக ஒரு புதிய இயக்கத்தை தொடங்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.