உலகின் இன்றியமையா ஒன்றான ஒளியையே உறைய வைத்து சாதனைப் படைத்திருக்கிறார்கள் இத்தாலி விஞ்ஞானிகள்.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய கதை நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல், மனிதன் முதல்முறை சிந்திக்க ஆரம்பித்ததற்கு நெருப்பு ஒரு மிகப்பெரிய காரணம். விலங்குகளிடமிருந்து தான் சற்று மேலானவன் என்பதை நிரூபிக்க அவன் நெருப்பையே பயன்படுத்தினான். ஆம்! விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்துக்கொல்லும் போது, அவை தன்னை அடித்துக் கொல்லாமல் பாதுகாத்துக்கொள்ள நெருப்பையே பயன்படுத்தினான்.
அதே நெருப்பின் ஒளியை வைத்து இரவை பகலாக்க முயன்றான். எளிதாக சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். இப்படி மனித நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதுதான் நெருப்பு. அதாவது ஒளி. இதில் சூரிய ஒளி, செயற்கை ஒளி என அனைத்துமே அடங்கும்.
மனிதன் அறிவியலில் கைத்தேர்ந்தவனாக மாறும்போது இயற்கையைவே தனக்கு ஏற்ற மாதிரி மாற்ற முயற்சிகள் செய்தான். அதில் பலவற்றில் வெற்றியும் பெற்று வருகிறான். மேலும் பலவற்றில் முயற்சி செய்துக்கொண்டே வருகிறான்.
அந்த முயற்சியில் ஒன்றுதான் ஒளியை உறையவைத்தல். தண்ணீரை மனிதன் உறையவைக்க ஃப்ரிட்ஜ் கண்டுபிடித்தான். ஆனால், அதற்கு கூட இயற்கை அவனுக்கு ஒரு மாதிரி வைத்திருந்தது. ஆம்! பனிகட்டிகள், பனிமலைகள்!
ஆனால், இப்படி எந்த மாதிரியும் இல்லாமல் ஒளியை உறையவைத்திருக்கிறான் மனிதன்.
ஒளி ஒரு வினாடிக்குச் சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது. இவ்வளவு வேகத்தில் செல்லும் ஒளி, துகள்கள் போலவும் அலைகள் போலவும் இரு வேறு பண்புகளைக் கொண்டது.
அந்தவகையில் இத்தாலியில், தேசிய ஆராய்ச்சி கழகம் (Council of National Research, CNR) என்ற ஒரு நிறுவனம் உள்ளது. இங்குப் பணியாற்றும் டி ட்ரைபோஜியார்கோஸ் (D Trypogeorgos) என்ற விஞ்ஞானியின் குழுவினர் ஒளியின் பண்புகளை ஆராய்ச்சி செய்து வந்தனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர், “ஃபோட்டான்களை" (Photons) மிகக் குறைந்த வெப்பநிலையில் கவனமாக கட்டமைக்கப்பட்ட சூழலில் அடைத்து வைத்தோம். பின்னர் மேம்பட்ட குவாண்டம் இயற்பியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஃபோட்டான்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கினோம். அதன் விளைவாக, அவை திடமான பொருளைப் போல செயல்படத் தொடங்கின.
இந்த ஒளி உறையவைப்பு, ஆற்றல்-திறனுள்ள கணினி, அதிவேக செயலிகள் மற்றும் அதிநவீன ஒளியியல் தொழில்நுட்பங்களில் மாற்றத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.” என்று கூறினார்கள்.