அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசான் , படிப்படியாக 6 லட்சம் பேரின் வேலை வாய்ப்பினை பறிக்க உள்ளதாக , அமெரிக்காவின் ஊடகமான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமேசான் நிறுவனத்தின் கசிந்த ஆவணங்களை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் பரவின. அமேசான் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில் நுட்பத்தை விட மேம்பட்ட நுட்பத்தை பயன்படுத்தி, மனிதர்களுக்கு பதில் ரோபோவை பயன்படுத்தி செலவுகளை தவிர்க்க முடிவு செய்துள்ளது.
அமேசான் ரோபோக்களைப் பயன்படுத்தி பணிகளை வாங்கும் போது அதற்கென்று எந்த ஒரு சம்பளமும் தரத் தேவையில்லை. ஊழியர்களுக்கு தேவையான பணி நேர இடைவேளை , வார விடுமுறைகள் , கேண்டீன் , மனிதவள துறை எல்லாம் தேவைப்படாது. இதனால் ரோபோ பணியாளர்களை அதிகப்படுத்தி மனித உழைப்பைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த தொடர் முயற்சியின் மூலமாக 2027 ஆம் ஆண்டுக்குள் "அமெரிக்க கிடங்குகளில் 1,60,000 க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை தவிர்க்க முடியும்" என்று அமேசானின் ஆட்டோமேஷன் குழு எதிர்பார்க்கிறது என்று அறிக்கை கூறுகிறது. ரோபோ பணியாட்கள் மூலம் அமேசான் நிறுவனம் பேக் செய்து, வழங்கும் ஒவ்வொரு பொருளிலும் நிறுவனத்திற்கு சுமார் 30 சென்ட் அமெரிக்க பணம் அளவிற்கு செலவை மிச்சப்படுத்துகிறது.
இது தொடர்கையில் 2033 ஆம் ஆண்டுக்குள்,ஆட்டோமேஷன் மூலம் 600,000 பணியிடங்கள் வரை , மனிதர்களிடமிருந்து ரோபாக்களுக்கு மாற்றப்படலாம் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கசிந்த அறிக்கையில் இந்த பணி நீக்கங்களை எல்லாம் உறுதிப் படுத்தவில்லை என்றாலும் , அதிகரிக்கும் மனித தேவைகளுக்கு புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்கலாம் என்றும், காலப்போக்கில் அதன் மனித பணியாளர்களை திறம்படக் குறைக்கும் என்றும் அது கூறியது.
இது பற்றி அமேசான் நிர்வாகிகள் கூறுகையில், 2033 ஆம் ஆண்டுக்குள் 6,00,000 வேலை வாய்ப்புகளை அமேசான் தவிர்க்கும் என்றாலும் அவர்கள் இரண்டு மடங்கு அதிகமான தயாரிப்புகளை விற்பனை செய்வார்கள் என்று கூறியுள்ளனர். தற்போது, அமேசான் சுமார் 12 லட்சம் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது.
அமேசான் நிறுவன தகவல் தொடர்பாளர் கெல்லி நான்டெல் இந்த அறிக்கையை பற்றி கூறுகையில் , அது நிறுவனத்திற்குள் இருக்கும் ஒரு குழுவின் திட்டங்களை ஆவணங்கள் பிரதிபலிப்பதாக இருக்கலாம் .ஆனால் , வரவுள்ள விடுமுறை காலத்தில் (கிறிஸ்துமஸ்) புதியதாக 250,000 பேருக்கு அமேசான் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்.ஆனால் , இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தாற்காலிக ஒப்பந்தப்படி இருக்குமா? அல்லது நிரந்தர பணியாக இருக்குமா? என்பதை அவர் குறிப்பிட வில்லை.
ரோபோக்களை பணியமர்த்தும் திட்டத்தை அமேசான் தற்போது திட்டம் போட்டு செயல்படுத்த வில்லை. மாறாக இந்த முயற்சியை அமேசான் 2012 ஆம் ஆண்டே தொடங்கி விட்டது.இது ரோபோட்டிக் ஆட்டோமேஷனில் உலகளவில் முதல் பெரிய முயற்சியாக இருக்கிறது. அமேசான் ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான கிவாவை $775 மில்லியனுக்கு வாங்கியது. கடந்த ஆண்டு, அமேசான் தனது கிடங்கை ரோபோ பணியாற்றும் வகையில் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இந்த கிடங்கில் சுமார் 1,000 ரோபோக்கள் மனிதர்களின் ஆதரவு இன்றி செயல்படும்.