அமெரிக்காவின் கடன் அதிகரித்து வரும் நிலையில், எலான் மஸ்க் இதுகுறித்து பேசியிருக்கிறார். அதாவது இப்படியே போனால், அமெரிக்கா விரைவில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று பேசியுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், பிரச்சாரமும், தேர்தல் பணிகளும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் என்றிருந்த நிலையில், அதிபர் தேர்தலில் பைடன் செயல்பாடுகள் குறித்து சொந்தக்கட்சியினரே விமர்சனம் செய்தனர். இப்படியான சூழலில்தான், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.
இதற்கிடையே திடமாக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த இவர், திடீரென்று போட்டியிடப்போவதில்லை என்று ஒருநாள் கூறினார்.
ஜோ பைடனுக்கு ஏற்கனவே சொந்த கட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தன. ஆகையால், அவரை இம்முறை போட்டியிட விடக்கூடாது என்று கட்சிக்காரர்களே எதிர்த்தனர். ஆனாலும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று திடமாக இருந்து வந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினரும் போட்டியிலிருந்து விலக கூறியதாக சொல்லப்படுகிறது. ஆகையால்தான் இவர் திடீரென்று போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார்.
இப்படியான சூழ்நிலையில் தற்போது வெளியாகும் செய்திகள்படி பார்த்தால் ஒருவேளை போட்டியிலிருந்து விலகியதற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ என்று கேள்விகளும் எழுந்துள்ளன.
அதாவது ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இதுகுறித்து எலான் மஸ்க் பேசியதாவது, “அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்.” என்று எச்சரித்திருக்கிறார்.
ஜோ பைடன் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்ற செய்திகளை அடுத்து, அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிடப்போவதாக செய்திகள் வந்தன. இதனையடுத்து டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கமலா ஹாரிஸே களமிறங்கவுள்ளார்.
ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.