
இரு தினங்களுக்கு முன் நோபல் பரிசுகள் பெறுபவர்கள் பற்றி அறிவிப்பு வெளியானதற்கு பின்னர் , அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர்கள் யார் யாரென்று மக்கள் தேட தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம் , அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்பதை பலமுறை வெளிப்படுத்தி இருந்தார்.அவருடைய ஆசைக்கு பின்னால் , முன்னாள் அதிபர்கள் போல தானும் நோபல் பரிசு பெற்றால் வரலாற்றில் ஒரு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். அமெரிக்க அதிபர்களில் ரூஸ்வெல்ட் முதல் ஒபாமா வரை , 4 பேர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு நோபல் பரிசை வழங்க காரணங்களும் உள்ளன.
தியோடர் ரூஸ்வெல்ட் (1906):
தியோடர் ரூஸ்வெல்ட் , அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் இவர் தான்.1901 ஆண்டு முதல் 1909 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். அவரது பதவி காலத்தில் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் மத்தியஸ்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்தார்.
அப்போது அமெரிக்காவிற்கு வல்லரசு பட்டமும் , வலிமை மிக்க நாடு என்று எந்த பெயரும் இல்லாமல் இருந்தது.அந்த காலக்கட்டத்தில் கூட அமைதியை கொண்டு வந்ததற்காக , தியோடர் ரூஸ்வெல்ட்டிற்கு 1906 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உட்ரோ வில்சன் (1919):
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இரண்டாவது அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் ஆவார். அமெரிக்காவின் 28வது அதிபரான அவர் 1913 ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். முதலாம் உலகப் போரின் போது அமைதிக்கான சமாதான முயற்சியில் அவர் ஈடுபட்டார். போருக்கு பின்னர் மீண்டும் போர் மூண்டு விடக் கூடாது என்று , சர்வதேச அமைதியை நிலைப்படுத்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பை நிறுவினார். முதலாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச அமைதிக்காக பணிபுரிந்ததால் உட்ரோ வில்சனுக்கு 1919 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
ஜிம்மி கார்ட்டர் (2002):
மிக நீண்ட இடைவேளைக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் ,ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.ஜிம்மி1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்தார்.பதவிக்கு பின்னர் கார்ட்டர் மையம் என்ற நிறுவனத்தை உருவாக்கி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அவர் ஊக்குவித்தார். இதற்காக அவருக்கு 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பராக் ஒபாமா (2009):
இறுதியாக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றுள்ளார். அமெரிக்காவின் 44 வது அதிபராக பதவியேற்ற அவர் , 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருந்தார். ஒபாமா அதிபராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே நார்வே நாடாளுமன்றத்தின் நோபல் பரிசுக்குழு அவரது வேட்புமனுவை சமர்ப்பித்தது. சர்வதேச ராஜதந்திரத்தையும், மக்களிடையே ஒத்துழைப்பையும் வலிமைப்படுத்தும் அவரது முயற்சிகளை பாராட்டி , 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.