விமர்சனம்: மருதம் - வேலியே பயிரை மேய்ந்த கதை!
ரேட்டிங்(3 / 5)
வங்கிகள் பாதுகாப்பானவை, வங்கி கணக்குடன் ஆதாரை இணையுங்கள், போன் நம்பரை சேருங்கள் என அரசும், வங்கிகளும் சொல்லிக்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த வங்கியில் பணியாற்றும் சிலரின் குற்ற செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை சில சமயங்களில் செய்திதாள்களில் பார்க்கிறோம். இது போன்று 'வேலியே பயிரை மேய்ந்த' உண்மை கதைதான் மருதம்.
படத்தின் ஹீரோ வித்தார்த் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். தனது மகனை பள்ளியில் சேர்க்க தனது நிலத்தை அடமானம் வைத்து மூன்று லட்சம் பெறுகிறார். ஒரு சில நாட்கள் கழித்து அந்த பகுதியில் உள்ள பிரபல வங்கி ஒன்று வித்தார்த்தின் நிலத்தை ஜப்தி செய்கிறது. வித்தார்த் வங்கிக்கு சென்று விசாரிக்கும் போது மறைந்த வித்தார்த்தின் தந்தை விவசாய கருவி ஒன்று வாங்க வங்கியில் கடன் வாங்கி இருப்பதாக சொல்கிறது வங்கி தரப்பு.
நீதிமன்றம் செல்லாத வக்கீல் ஒருவர் வித்தார்த்திற்கு உதவ முன்வருகிறார். இவரின் வழிகாட்டுதலின் படி பல தகவல்களை சேகரிக்கிறார் வித்தார்த். தன்னை மட்டுமல்ல இது போன்று பல விவசாயிகளிடம் வங்கி மோசடி செய்திருப்பதை கண்டுபிடிக்கிறார். பாதிக்கப்பட்ட நபர்களை ஒருங்கிணைத்து நீதிமன்ற்றத்தின் கதவுகளை தட்டுகிறார். நீதிமன்றத்தில் நியாயம் கிடைத்ததா என்று சொல்கிறது மருதம்.
வேலூர் ராணி பேட்டை பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை நாம் நேரில் பார்த்தால் எப்படி உணர்வோமோ அது போன்ற ஒரு உணர்வு படத்தின் இரண்டாம் பாதியில் தந்திருக்கிறார் டைரக்டர். படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் சாதாரணமாகவே உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் ஆழமான விவரிப்பும் அழுத்தமும் முதல் பாதியை பேலன்ஸ் செய்து விடுகிறது.
வித்தார்த் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்திக்கும் போது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூட புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் வித்தார்த்தை துரத்தி அடிக்கும் காட்சி மிக யதார்த்தமாக உள்ளது. நிலத்தை பறிகொடுத்த விவசாயி எப்படி கதறுவார், எதிர்காலமே சூனியமானதை போல் இருந்தால் எப்படி நடந்து கொள்வார் என்பதை தனது நடிப்பில் தந்துள்ளார் வித்தார்த்.
கிளைமாக்ஸ் காட்சியில் நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது விதார்த் கண்களில் வரும் கண்ணீர் பார்க்கும் ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் எட்டி பார்க்கிறது. ஒரு சராசரி ஹீரோயின் போல் வந்து போகாமல் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை தந்துள்ளார் ரக்ஷானா.
லொள்ளுசபா மாறன் நகைச்சுவையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ரகுநந்தனின் இசை வேலூர் வெயிலை குளுமை யாக்குகிறது. படத்தின் முடிவில் வங்கி மோசடிகளால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம் என்று வாசாகம் போடுகிறார்கள். அரசுகளும், வங்கிக்களும் விவசாயிகளுக்கு கடன் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து மோசடி செய்து அவர்களின் நிலத்தை அபகரிக்காதீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.
மருதம் - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.