
2013-ம் ஆண்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில், அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக, கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கரில் , ரூ.10.5 கோடியில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 'அம்மா குடிநீர்' என்ற பெயரில் 1 லிட்டர் 10 ரூபாய்க்கு பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து தினமும் 2 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
பேருந்து நிலையங்களில் ஏழை மக்களும் எளிதாக வாங்கும் வகையில், 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது.
தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை 20 ரூபாய்க்கும், ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே நிலையங்களில் ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் `அம்மா குடிநீர்' திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஆனால், ஜெயலலிதாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட `அம்மா குடிநீர்' திட்டம் அவரது மறைவுக்குப் பிறகான, உற்பத்திக் குறைவு, மற்றும் கொரோனா போன்ற காரணங்களால், உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு, அம்மா குடிநீர் விற்பனை பல இடங்களில் மெல்ல மெல்ல முடங்கத் தொடங்கி தற்போது முற்றிலுமாக நின்று போனது. சில அரசுத் துறைகள் பொறுப்பை மாற்றுவதில் தாமதம் காட்டுவதால், இது முடங்கிப் போனதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தினமும் 1,080க்கும் அதிகமாக இயக்கப்படும் 'டீலக்ஸ், ஏசி' விரைவு பேருந்துகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இவ்வாறு நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என, அதிகளவு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், மீண்டும் அரசு போக்குவரத்து கழகங்களில், பயணிகள் வசதிக்காக மீண்டும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம், அடுத்த 3 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் இதற்கு 'அப்பா' குடிநீர் என பெயர் வைக்க ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் தமிழக அரசு பெயரை முடிவு செய்யும் எனவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.10க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில், இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் பின்னர், படிப்படியாக தேவை அடிப்படையில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
`அம்மா குடிநீர்' திட்டமோ `அப்பா குடிநீர்' திட்டமோ... ஏதோ ஒரு பெயரில் இந்த மகத்தான திட்டம் மீண்டும் தொடர்ந்திட வேண்டும் என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது..!