
ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாக இன்று முதல் அன்றாட பயன்பாட்டுபொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரெயில்வே தனது பிரபலமான 'ரயில் நீர்' பாட்டில் தண்ணீரின் விலையைக் குறைத்துள்ளது.
இந்தியன் ரெயில்வே ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு சிறப்பு வசதிகளையும், சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரெயில்வே அமைச்சகத்தால், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும், ரெயில்களில் ‘ரெயில் நீர்’ என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தால் (IRCTC) அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு தயாரிப்பாகும்.
ரெயில் பயணத்தின் போது பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்திலும், பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்பதற்காகவும் இது உருவாக்கப்பட்டது. இது ஒரு பிராண்டட் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீராகும். இது பயணிகளுக்கு வசதியாக ரெயில்வே வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும், அரை லிட்டர் பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் காரணமாக, ரெயில்வே அமைச்சகம் ஆனது தனது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆன ‘ரயில் நீரின்’ அதிகபட்ச விற்பனை விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், ரெயில்வே அமைச்சகம் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கப்படும் தனது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீரான ‘ரெயில் நீர்’ பாட்டில் விலையை ரூ.1 குறைத்து அறிவித்துள்ளது. இது குறித்து, ரெயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் இதர தண்ணீர் பாட்டில் விலை ரூ.1 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் 'ரயில் நீர்' பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாயில் இருந்து 14 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 0.5 லிட்டர் (500 மில்லி) பாட்டில் தண்ணீர் 10 ரூபாயில் இருந்து 9 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு ரெயில் பயணிகளுக்கு கணிசமான சேமிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. மேலும், ரெயில்வே வளாகங்கள் மற்றும் ரெயில்களில் விற்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி அல்லது ரெயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட பிற பிராண்டுகளின் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களுக்கும் இதே விலைக் குறைப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் நிஜாமுதீனில் இருந்து புறப்படும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பிற்காக தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் காலப்போக்கில், இந்தியாவின் பெரும்பாலான ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் 'ரயில் நீர்' பாட்டில்கள் பரவலாக விற்பனைக்கு வர ஆரம்பித்தது.
ரயில்வேயின் 'ரயில் நீர்' பாட்டிலின் விலை குறைப்பு தினமும் ரெயில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு, குறிப்பாக நீண்ட தூரப் பயணிகளுக்கு, செலவுகளைக் குறைத்து, பயணத்தை மேலும் இனிமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒன்றிய அரசு மேற்கொண்ட GST சீர்திருத்தம் இன்று(செப்.22) முதல் அமலுக்கு வரும் நிலையில் தண்ணீர் பாட்டிலின் விலைக் குறைப்பும் இன்று முதல் அமலுக்கு வருகிறது என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.