‘அம்மா உணவகம் மூடப்படுகிறதா?’ சட்டசபையில் காரசார விவாதம்!

‘அம்மா உணவகம் மூடப்படுகிறதா?’ சட்டசபையில் காரசார விவாதம்!
Published on

மிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலைக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உரிய நிதி ஒதுக்கப்படாததால் அவை முடங்கும் நிலையில் இருக்கிறது’ என்று கூறினார்.

அவருக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ‘அம்மா உணவகம் குறித்து தினமும் அரசியலாக்கப்படுகிறது. தமிழகத்தில் அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. தவிர, ஒரு இடத்தில் கூட இதுவரை அம்மா உணவகம் மூடப்படவில்லை. மேலும், ஒரு அம்மா உணவகத்தில் இருந்து மாதத்துக்கு 4000 ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. இதனால் சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசியலாக்க வேண்டாம். மேலும், அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உனவகங்களுக்கு இந்த ஆண்டு ரூபாய் 129 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் மூலம் 15 கோடி ரூபாய்தான் வருமானம் வருகிறது’ என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘அம்மா உணவகங்கள் குறித்து பல்வேறு புகார்கள் வருகின்றன. உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்காததால் தரமான உணவு வழங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அம்மா உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து வருகிறது’ எனக் குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அது எந்த அம்மா உணவகம் என ஆதாரத்தோடு சொன்னால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தவறே நடக்கவில்லை என கூறவில்லை. எங்கே நடக்கிறது என ஆதாரத்தோடு கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘அம்மா உணவகங்கள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதனை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், "வெளியிடப்படும் செய்திகள் ஆதாரத்தோடு இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று பதில் அளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com