வாட்ஸ்அப் தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மோசடி மையங்களுடன் தொடர்புடைய 6.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸப்பில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் நம்மை ஒரு குழுவில் நம்முடைய அனுமதி இல்லாமல் சேர்த்துவிட்டு, ஒரு பெரிய ஸ்கேமில் சிக்கவைப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வாட்ஸப் ஒரு முக்கிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சேஃப்டி ஓவர்வியூ" (Safety Overview) என்ற இந்த அம்சம், ஒரு குழுவில் நீங்கள் சேர்க்கப்படும்போது, அந்த குழுவைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. உங்கள் தொடர்பில் இல்லாத ஒருவர் உங்களை ஒரு புதிய குழுவில் சேர்க்கும்போது, அந்த குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை, அதை உருவாக்கியவர் மற்றும் உருவாக்கப்பட்ட தேதி போன்ற தகவல்களை இந்த அம்சம் காண்பிக்கும்.
இதன் மூலம், பயனர்கள் தாங்கள் குழுவில் தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை எளிதாக முடிவு செய்யலாம். நீங்கள் வெளியேற விரும்பினால், குழுவில் உள்ள செய்திகளைப் பார்க்காமலேயே வெளியேறலாம். மேலும், குழுவில் உள்ள செய்திகளுக்கான அறிவிப்புகள், நீங்கள் குழுவில் தொடர ஒப்புக்கொள்ளும் வரை முடக்கப்படும்.
தனிப்பட்ட உரையாடல்களுக்கும் புதிய எச்சரிக்கை அம்சங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமான புதிய நபருடன் உரையாடும்போது, அந்த நபரைப் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த அம்சம் வழங்கும். இது பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க உதவும்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், வாட்ஸ்அப் மற்றும் மெட்டா பாதுகாப்பு குழுக்கள் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மோசடி கணக்குகளை முடக்கியுள்ளன. இந்த கணக்குகள் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் செயல்படும் மோசடி மையங்களுடன் தொடர்புடையவை என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மோசடி நடவடிக்கைகளை முன்கூட்டியே தடுத்து, பயனர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.