கானாவில் புதன்கிழமை (ஆகஸ்ட் 6, 2025) நடைபெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில், அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக z9 ஹெலிகாப்டர் காலை 9 மணியளவில் அக்ராவிலிருந்து புறப்பட்டு ஒபுவாசி நோக்கி கிளம்பியது. சில நேரத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் காணாமல்போனதாக செய்திகள் வந்தன. அந்தவகையில் தற்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தி வெளியாகியுள்ளது.
கானா இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் தலைநகர் அக்ராவில் இருந்து காலை புறப்பட்டு, வடமேற்கு திசையில் உள்ள அஷாந்தி மாகாணத்தின் ஒபுவாசி தங்கச் சுரங்கப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, அது ரேடாரில் இருந்து மறைந்தது. பின்னர், ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் அஷாந்தி பகுதியில் உள்ள அடான்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த துயரமான விபத்தில் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமானே போவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முஹம்மது, ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர், ஒரு முக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஹெலிகொப்டர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரசு, "ஒரு தேசிய துயரம்" என குறிப்பிட்டுள்ளது. பலரும் உயிரிழந்தவர்களின் வீடுகளிலும், கட்சியின் தலைமையகத்திலும் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான Z-9 ரக ஹெலிகொப்டர், போக்குவரத்து மற்றும் மருத்துவ அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், ஹெலிகொப்டரின் பாகங்கள் காட்டுப் பகுதியில் எரிந்து கொண்டிருப்பதும், மக்கள் உதவிக் கரம் நீட்டுவதும் பதிவாகியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் கானாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்பு, மே 2014-ல் ஒரு சேவை ஹெலிகொப்டர் கடலோரப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 2012-ல் ஒரு சரக்கு விமானம் அக்ரா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி பேருந்து மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.