மழைக்காலம் வந்ததும் டெங்குவும் உடன் வந்துவிடும். எங்குப்பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும். அந்தவகையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அதிகளவு டெங்கு பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொசுவால் ஏற்படும் இந்த டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்புவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாது என்றாலும், மக்களை மிகவும் பாதிக்கும்.
இந்த காலங்களில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களுக்கு பெரியளவு சிரமம் ஏற்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில்தான் எப்போதும் அதிகளவு டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆனால், தற்போது தமிழகம் முழுவதுமே அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை சென்னையில் தொடங்கி வைத்த பிறகு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “இந்த ஆண்டு 6565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
மேலும் தமிழகம் முழுவதும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளும் மருத்துவமனைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டுவிட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் தென்படுகின்றன. ஆகையால் மக்களும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு, நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக் கொள்ளுதல் அவசியம்.