அலெக்ஸா என்ற பயன்பாடு அமேசானால் கண்டுபிடிக்கப்பட்டதை அறிவோம். இது கிளவுட் அடிப்படையிலான குரல் உதவி அமைப்பாகும். டைமர் செட் செய்வது, கேள்விகளைக் கேட்பது, இசை ஆல்பங்களை இயக்குவது, உத்தரவு தருவது என்று நமது அன்றாடப் பணிகளில் பங்கு பெறும் ஒரு தொழில்நுட்ப அதிசய பயன்பாடாகும் இது. இதைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இதன் உதவியால் வீட்டில் புகுந்த குரங்குகளை விரட்டி குழந்தையைக் காத்த சிறுமியின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கடந்த வியாழனன்று நடந்த சம்பவத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், பாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜ் ஓஜா என்பவர் வெளியே சென்றபோது கவனக்குறைவாக வீட்டின் முன் கதவைத் திறந்தே வைத்துச் செல்ல, அந்த நேரத்தில் வீட்டுக்குள் குரங்குகள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. வரவேற்பறையை அலங்கோலப்படுத்திய குரங்குகள் சமையலறையையும் விட்டு வைக்கவில்லை.
அப்போது அங்கு வந்திருந்த உறவுக்கார சிறுமி நிகிதாவும், ஓஜாவின் 15 மாதமேயான குழந்தை வாமிகாவும் படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். குரங்குகள் இருவரையும் நோக்கி செல்ல முற்பட, பயந்துபோனாலும் சிறுமி நிகிதா ஃபிரிட்ஜ் அருகே இருந்த அலெக்ஸா எனும் மெய்நிகர் உதவிக்கருவியை கவனித்து உடனேயே துணிவுடனும் புத்திசாலித்தனத்துடனும் அலெக்ஸாவை நோக்கி நாய் போல் குரைக்கக் கட்டளையிட்டார்.
அலெக்ஸாவும் நாய் போல் குரைக்க, மிரண்டு போன குரங்குகள் பால்கனி வழியே குழந்தையை விட்டு ஓடி விட்டன. அலெக்ஸாவை அட்டகாசமாகப் பயன்படுத்திய நிகிதாவின் செயல் இணையவெளியில் பகிரப்பட்டு அனைவரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகிந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா அந்தச் சிறுமியை பாராட்டியதுடன், அவருக்கு எதிர்காலத்துக்கான ஜாப் ஆஃபரையும் வழங்க முன்வந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிறுமி நிகிதாவின் இந்த சமயோசிதத்தைப் பாராட்டிய ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதளத்தில், "நம் காலகட்டத்தின் பெரிய கேள்வி என்னவெனில், மனிதகுலம் தொழில்நுட்பத்தின் அடிமையா? ஆண்டனா? என்பதுதான். ஆனால் இந்தச் சிறுமி தனது புத்திக் கூர்மையினால் தொழில்நுட்பத்தை மிகத் துல்லியமாக, சரியான தருணத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டியுள்ளார். அவரது விரைவு கதி சிந்தனை அசாதாரணமானது. முற்றிலும் கணிக்க முடியாத இவ்வுலகில் நிகிதா காட்டியிருக்கும் இந்தத் திறமை தலைமைத்துவ பண்புகளுக்குரியது. நிகிதா தனது கல்வியை முடித்து விடும்போது அவர் கார்ப்பரேட் உலகில் பணியாற்ற விருப்பம் கொண்டால் அவரை எங்கள் நிறுவனத்தில் பணியில் சேர அழைக்கிறோம். அவரை நாங்கள் திருப்தி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று பெருமையுடன் குறிப்பிட்டு உள்ளார்.
குழந்தைகளின் துணிவும், மதிநுட்பமும் அவர்களின் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பதுடன், எதிர்காலத்தை வளமாக்கி சமூகப் பங்களிப்பதற்கும் உதவும் என்பதற்கு நிகிதா ஒரு சான்று.