சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் ஆவாரா? யார் இந்த சுனிதா?

Sunita Kejriwal
Sunita Kejriwal

டெல்லியில் ஒரு பக்கம் தேர்தல் திருவிழா காட்சிகள் அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதைத் தொடர்ந்து அவரது கட்சியினரும், பேருக்கு மற்ற எதிர்க்கட்சியினரும் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.

சிறையில் இருந்தாலும் அவரே முதலமைச்சர் என்று முழங்குகிறது ஆம் ஆத்மி கட்சி. அவரும் அதற்கேற்ப துண்டுச் சீட்டுகளில் தனது அமைச்சரவை சகாக்களுக்கு மக்கள் நல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், அவரது சிறைவாசம் நீடித்தால், அவரால் டெல்லி முதலமைச்சர் பதவியில் தொடர முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. நம் ஊர் செந்தில் பாலாஜி போல, கெஜ்ரிவால் இலாக்கா இல்லாத முதலமைச்சராக இருக்கலாமா? என்று தெரியவில்லை.

அவர் முதலமைச்சராக இருப்பதற்கு சிக்கல் ஏற்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக யாரை முதலமைச்சர் ஆக்குவது என்ற ஆலோசனை கட்சியின் முக்கிய உள்வட்டத்தில் நடந்துகொண்டிருப்பதாகக் கேள்வி. லாலு பிரசாத் செய்ததுபோல தான் அமர்ந்த முதல்வர் நாற்காலியில், கெஜ்ரிவால் தன் மனைவி சுனிதாவை உட்கார வைப்பார் என்று படு ஸ்டிராங்கான வதந்திகள் டெல்லியில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

சுனிதா கெஜ்ரிவாலின் பின்னணி என்ன என்று தெரிந்துகொள்வோமா?

ஆனால், லாலு மனைவி ராப்ரி தேவிக்கும், கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கும் வித்தியாசம் உண்டு. சுனிதா ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்று வருமான வரித்துறையில் கமிஷனராகப் பணியாற்றியவர்.  அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆன பின்னர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

கெஜ்ரிவாலும், சுனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இருவரும் 1993ல் மத்திய அரசின் ஐ.ஆர். எஸ். பணிக்குத் தேர்வாகி, முசூரியில் உள்ள  சிவில் சர்வீஸ் அகாடமியில் பயிற்சிக்குச் சென்றிருந்த சமயத்தில் முதன் முதலாக சந்தித்தார்கள். இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. ஒரு நாள் சுனிதாவிடம் நேரிடையாகவே கெஜ்ரிவால் “ஏன்னை திருமணம் செய்துகொள்வாயா?’ என்றே கேட்டுவிட்டார். உடனடியாக சுனிதாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். 1994 நவம்பரில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
நடிகர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
Sunita Kejriwal

இருவரது மண வாழ்க்கையும் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவர்களுக்கு ஹர்ஷிதா, புல்கித் என்று ஒரு பெண்; ஒரு பையன். கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி தெருவில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு சூறாவளி என்றால் மிகை இல்லை. அவர், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சமூகப் போராட்டம், அரசியல் என பிசியாகிவிட்ட பிறகு, 2016ல் குடும்ப நிர்வாகத்தை கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு பெற்றார்.  சுனிதா, எப்போதுமே மீடியா வெளிச்சம் தன் மீது விழுவதை சற்றும் விரும்பாதவர். அவருக்கு தன் கணவர் மீதான அரசியல் விமர்சனங்களைவிட, அவரது சர்க்கரை நோய்க்கு வேளாவேளைக்கு இன்சுலின் போட்டுக்கொண்டாரா என்பது பற்றித்தான் அதிகம் கவலைப்படுவார்.

ஆனாலும், 2020 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலின்போது கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்துக்காக மற்ற தொகுதிகளுக்கும் வெளியூர்களுக்கும் செல்ல வேண்டி இருந்தபோது, அவரது சட்டமன்றத் தொகுதியில் தன் கணவருக்காக வாக்கு சேகரித்தார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின்போதும் அவர் பிரச்சாரம் செய்தார்.

தனது எக்ஸ் சமூக தளம் மூலமாக ஆம் ஆத்மி அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றி மட்டும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். அண்மையில், தனது கணவரது கைதுக்குப் பிறகு, டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் பேரணியில் பங்கேற்றார். அப்போது “கெஜ்ரிவால் ஒரு சிங்கம்! அவரை நீண்ட காலம் ஜெயிலில் அடைத்து வைத்திருக்க முடியாது!” என்று முழங்கினார். அதனையடுத்து, டெல்லி மக்களுக்கு வீடியோ மூலமாக கெஜ்ரிவாலுக்கு ஆதரவும், அனுதாபமும் திரட்டும் வேலையில் இறங்கி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com