ஒடிசாவில் 1.5 கோடி ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் மயோசீன் காலத்து சுறா பற்கள் மற்றும் அரிய கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
dFossils discovered in Mahulia village
dFossils discovered in Mahulia villageimage credit-etvbharat.com
Updated on

பழங்காலத்தில் வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள் அல்லது உயிரினங்களின் எச்சங்கள், தடயங்கள், அல்லது அச்சுகள் காலப்போக்கில் மண் அல்லது கல் அடுக்குகளுக்குள் பாதுகாக்கப்பட்டு கிடைப்பவையே பழமையான புதைபடிவங்கள் (Fossils) எனப்படும்.

குறிப்பாக லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்கள் இறந்த பிறகு, அவற்றின் எலும்புகள், பற்கள், இலை மற்றும் மரங்களின் தடயங்கள், காலடிச் சுவடுகள், முட்டை ஓடுகள் போன்றவை மண் அடுக்குகளில் புதைந்து காலப்போக்கில் கல்லாக மாறி பாதுகாக்கப்படுவது தான் புதைபடிவம்.

குறிப்பாக புதைபடிவங்கள் டைனோசர் எலும்பு போன்ற உடல் பகுதி எச்சங்கள் கொண்ட உடல் புதைபடிவம், பழங்கால மீன் அச்சு போன்ற காலடிச் சுவடு, கூடுகள் கொண்ட தடய புதைபடிவம், மர இலை கல் அச்சு உள்ளிட்ட உணவுத்தடயங்கள் கொண்ட தாவர புதைபடிவம் என வகை படுத்தப்படுகிறது.

புதைபடிவங்கள் ஆய்வுகள் மூலம் பூமியில் பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி போன்றவற்றை அறியலாம். மேலும் அவற்றின் அடிப்படையில் பண்டைய காலத்தின் காலநிலை, சுற்றுச்சூழல் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் என்பதால் இந்த புதைபடிவங்கள் ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது.

அவ்வகையில் தமிழகத்திலும் அரியலூர் மாவட்டத்தில் டைனோசர் முட்டை ஓடு புதைபடிவங்கள், கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்கள், மரப் புதைபடிவங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்ட அரசுத் தகவல்படி கல்லங்குறிச்சி சுரங்கப் பகுதிகள் மற்றும் நின்னியூர் பகுதிகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலடியாக இருந்ததால் அமோனைட், சிப்பி போன்ற கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்களும் அதிகம் கிடைப்பதாக குறிப்புகள் கூறுகிறது.

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபடா புதைபடிவப் பகுதியில் சுமார் 1.5 கோடி ஆண்டுகள் (15 மில்லியன் ஆண்டுகள்) பழமையான அரிய கடல்வாழ் உயிரினங்களின் குறிப்பாக சுறா மீன்களின் பற்கள் முதுகெலும்புகள் உள்ளிட்ட புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கண்டுபிடிப்பினால் தற்போது நிலப்பரப்பாக உள்ள இப்பகுதி மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆழ் கடலாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்பகுதியில் காணப்படும் இந்த எச்சங்களை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக 'அசுர ஹடா' அதாவது அசுரர்களின் எலும்புகள் என்று அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குலியானா வட்டாரத்தில் உள்ள டேரா முதல் படசாகி வட்டாரத்தில் உள்ள பிரதாப்பூர் வரை பரவியுள்ள பரிபாடா புதைபடிவப் படுகையிலிருந்து இந்தப் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

dFossils discovered in Mahulia village
dFossils discovered in Mahulia villageimage credit-cnbctv18.com

குறிப்பிடத்தக்க பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றங்களால் குறிக்கப்பட்ட ஒரு காலகட்டமான மயோசீன் சகாப்தத்தைச் சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சங்களின் காலத்தைக் கணித்துள்ளனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தற்போதைய பரிபாடா மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் பெரும்பகுதிகள் ஒரு காலத்தில் ஆழமற்ற கடல் சூழலின் ஒரு பகுதியாக இருந்தன என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்ச் டியோ (MSCB) பல்கலைக்கழகத்தின் ஜிஐஎஸ் (GIS) துறையைச் சேர்ந்த பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் தேபப்ரதா நந்தி என்பவரே இந்த கண்டுபிடிப்பின் மூலகர்த்தா.

அவர் தனியார் செய்தியாளரிடம் பேசும் போது "மாணவர்களுடன் களப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ​​புதைபடிவம் போன்ற சில எச்சங்களை நான் கவனித்தேன். உள்ளூர் மக்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டபோது, ​​அவர்கள் அவற்றை 'அசுர ஹத்தா' அல்லது 'அசுரனின் எலும்புகள்' என்று குறிப்பிட்டனர்.

இதையும் படியுங்கள்:
கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு.. 183 பொருட்கள் கண்டுபிடிப்பு!
dFossils discovered in Mahulia village

பின்னர் நாங்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில், சுறா மீனின் பற்கள் மற்றும் முதுகெலும்புத் துண்டுகள் போன்ற நுண் புதைபடிவங்கள் உட்படப் பல புதைபடிவங்களையும், இன்னும் அடையாளம் காணப்படாத பிற மாதிரிகளையும் கண்டறிந்தோம்," என்று கூறியுள்ளார்.

மேலும் “இது பெரும்பாலும் சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மயோசீன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இது ஒரு கடல் மண்டலமாக இருந்திருக்காவிட்டால், நாம் சுறா பற்களையும் மற்ற கடல் விலங்குகளின் புதைபடிவங்களையும் கண்டறிந்திருக்க மாட்டோம். அவற்றின் இருப்பு, இப்பகுதி ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது,” என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்புகளின் முழுமையான முக்கியத்துவத்தைத் தீர்மானிக்க, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - மண்டையோடு மர்மங்களும் அகழாய்வு அதிசயங்களும்!
dFossils discovered in Mahulia village

அத்துடன் தற்போது கவனம் பெற்றுள்ள பரிபாடா புதைபடிவப் படிவுப் பகுதியானது, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு ஒடிசாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் பங்களித்து, ஒரு பாரம்பரியத் தலமாக உருவெடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com