
திருப்பதி பக்தர்கள் இனி வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறலாம் என ஆந்திர அரசு அறிவித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களின் வசதிக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெடுகளை பக்தர்கள் முன்கூட்டியே புக் செய்யவேண்டும். இதற்காக பக்தர்கள் காத்திருந்து சில மணி நேரங்களுக்குள்ளேயே புக் செய்து விடுவார்கள். சிலருக்கு இது தெரியாததால், நீண்ட வரிசையில் காத்திருந்து நாள் கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பார்கள்.
நவீன காலத்தில் அனைவரும் வாட்ஸ் ஆப் பயனர்களாக இருக்கின்றோம். வீட்டிற்கு ஒருவரிடமாவது வாட்ஸ் ஆப் வசதி உள்ளது. இதனால் டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதோடு இல்லாமல் சேவைகளுக்கு நன்கொடைகளும் இதன் மூலமே வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
திருப்பதி டிக்கெட் மட்டுமில்லாமல், திரைப்பட டிக்கெட்டுகள், அரசு பஸ் நேரடி ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதியும் வாட்ஸ் ஆப் எண்ணில் சேர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவைகள் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்குமாம்.