
திருப்பதி பக்தர்களுக்கு இனி லட்டுடன் சேர்த்து மசால் வடையும் பிரசாதமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் உலகளவில் பேமஸ் போன்றே அங்கு வழங்கப்படும் லட்டுக்கும் தனித்துவம் உண்டு. மிகப்பெரிய லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதே அங்கு சிறப்பாகும். அதுவும் பொதுவாக செய்யப்படும் லட்டு போன்று அந்த லட்டு இருக்காது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தரிசன டிக்கெட்டுடன் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டுகள் தேவைப்படின் கவுண்டர்களில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இங்கு ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்தில் கூட லட்டுவில் கலப்படம் இருப்பதாக பிரச்சனை எழுந்தது. லட்டு மற்றும் நெய்வேத்திய பிரசாதங்கள் ஆகியவற்றை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் பலநூறு கோடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்கிறது. அப்படிப்பட்ட லட்டுவில் பிரச்சனையா என்று மக்களிடையே கருத்து நிலவி வந்தது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூட்டத்தில் ஒரே நேரத்தில் நான்காயிரம் பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. வாழை இலையில் சர்க்கரை பொங்கல், சாதம், சாம்பார், பொரியல், ரசம் ஆகியவை பரிமாறப்படுகின்றன. இத்துடன் மேலும் ஒரு பிரசாதத்தை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக வெங்காயம், பூண்டு இல்லாமல் மசாலா வடைகளை தயாரித்து 5,000 பக்தர்களுக்கு பரிமாறினர். மசால் வடைகள் சுவையாக இருந்ததாக பக்தர்கள் திருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி அன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் மசாலா வடையுடன் அன்னதானம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.