
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் தான் சமீப காலமாக உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் ஏஐ பயன்பாடு மிகுந்து வருவதால், பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாகி விட்டது. இந்நிலையில் கொசுக்களை ஒழித்து கட்டவும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆந்திர அரசு தயாராகி வருகிறது. இதற்கான சோதனை முயற்சி விரைவில் தொடங்கப்படும் எனவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா ஆகிய கூட்டணி கட்சிகளின் உதவியுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்கிறார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்கும் விதமாக, ஏஐ தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளது ஆந்திர அரசு.
ஆண்டுதோறும் கொசுக்கடியால் பொதுமக்கள் பலரும் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இந்த அவல நிலையைப் போக்கும் விதமாக கொசுக்களை ஒழித்துக் கட்ட முன் வந்திருக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.
கொசு ஒழிப்பில் ஏஐ பயன்பாடு குறித்து ஆந்திர அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்றைய நவீன உலகில் ட்ரோன்கள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி கொசுக்களை எளிதாக அழிக்க முடியும். இதற்கான சோதனை முயற்சியை நமது அரசு கையில் எடுத்துள்ளது. இணையத்தின் வழியாக இணைக்கப்பட்டுள்ள சென்சார்களின் உதவியுடன் கொசுக்கள் அதிகளவில் எங்கு உற்பத்தியாகின்றன என்பது கண்டறியப்படும். பிறகு ஆட்டோமெட்டிக் முறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு கொசுக்கள் அழிக்கப்படும். இதற்காக கொசு கண்காணிப்பு அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஸ்மார்ட் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
விஜயவாடா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர் மற்றும் ராஜமஹேந்திரவரம் உள்ளிட்ட 6 நகராட்சிகளில் இருக்கும் 66 இடங்களில் சோதனை முறையில் கொசு ஒழிப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும். இதுதவிர மலேரியா மற்றும் டெங்கு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் விவரங்கள் மருத்துவமனைகள் வாயிலாக பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களிலும் கொசு ஒழிப்பு முறை மேற்கொள்ளப்படும்.
கொசுக்களின் இனங்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க ஏஐ பயன்பாடு முக்கிய கருவியாக இருக்கும் எனவும் ஆந்திர அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.