
பாரம்பரிய மாட்டினங்கள் அழிந்து வரும் இன்றைய நிலையில், பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுபற்றி பலருக்கும் தெரியாது. ஏனெனில் இந்தத் திட்டம் செயலில் இருப்பது தமிழ்நாட்டில் அல்ல! கர்நாடகாவில்! பசுக்களை வளர்க்க முடியாமல் தவிக்கும் ஏழை விவசாயிகளின் கவலையைப் போக்கவும், பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் புண்யகோடி தத்து யோஜானா திட்டம்.
விவசாயத்தில் முக்கியப் பங்காற்றும் காளை மற்றும் பசுக்களை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். இன்றைய நவீன உலகில் பாரம்பரிய காளை இனங்கள் பல அழிந்து விட்டன. அடுத்ததாக பசுக்களின் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியது கர்நாடக அரசு.
கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தொடங்கப்பட்ட புண்யகோடி தத்து யோஜானா திட்டமானது, முதலில் அரசு ஊழியர்களுக்குத் தான் முன்னுரிமை அளித்தது. இத்திட்டத்தின் படி, ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் ரூ.11,000 செலுத்தி பசுக்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு கோசாலைகளில் இருக்கும் பசுக்களை 3 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை தத்தெடுத்துக் கொள்ளலாம். இதுதவிர பசுக்களுக்கு உணவளிக்க விரும்பினால், தினசரி ரூ.70 செலுத்த வேண்டும்.
கர்நாடகாவில் மொத்தம் 215-க்கும் மேற்பட்ட கோசாலைகளும், 100-க்கும் மேற்பட்ட அரசு கோசாலைகளும் உள்ளன. இத்திட்டம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்கும் வண்ணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பிறந்தநாள், திருமண நாள், விழாக்கால பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்களில் கோசாலைகளுக்கு நன்கொடை அளிக்கலாம். இத்திட்டம் பசுக்களின் தீவனப் பற்றாக்குறையை நீக்குவதோடு, அவை வளமுடன் வளரவும் வழிவகுக்கிறது.
வயதான மாடுகள், கன்றுக் குட்டிகள், நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் மற்றும் விவசாயிகளால் வளர்க்க முடியாத மாடுகள் உள்பட அனைத்து பசுக்களும் புண்யகோடி தத்து யோஜனா திட்டத்தின் கீழ் கோசாலையில் வளர்க்கப்படுகின்றன.
இதுதவிர விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கோசாலைகளுக்கு பசுக்களை தானம் கொடுக்கலாம். பசுக்களைத் தத்தெடுப்பவர்களுக்கும், தானம் கொடுப்பவர்களுக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
கோசாலைகள் நிதியில்லாமல் தடுமாறுவதைத் தடுக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் பாதுகாக்கப்படும் பசுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புண்யகோடி தத்து திட்டம் கர்நாடகாவில் மட்டுமின்றி, இந்தியா முழுக்க விரிவடைந்தால் அது பாரம்பரிய பசுக்களைப் பாதுகாக்க பேருதவியாக இருக்கும். “பசுக்கு உதவுவது தாய்க்கு உதவுவது போல” என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.