

தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், 2020-ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்து தனது புள்ளி விபரங்கள் கொண்ட தெளிவான பேச்சால் மக்களிடையே விரைவாக கவனம் பெற்றார்.
கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதுடன்
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அப்போது அந்தப் பதவியை வகித்த இளைய தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
“என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை நடத்தி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்ததன் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக கட்சியை காலூன்ற வைத்ததில் முக்கியப் பங்கு வகித்த இவர், சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எழுந்த பல்வேறு குழப்பங்கள் மற்றும் கட்சித் தலைமையின் மாறுபட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
திமுக அரசை விமர்சிக்கும் தீவிர அரசியல் பாணியால் அதிக கவனம் பெற்ற அண்ணாமலை தற்போது புதிய கட்சி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
நீண்ட நாட்களாகவே கட்சியின் செயல்பாடுகளால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவருக்கு பெருமளவு ஆதரவு தந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .
அதை உறுதிபடுத்தும் வகையில் பாஜகவின் தேசிய தலைவரான நிதின் நபினை சந்திக்க டெல்லி செல்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.புதிய கட்சி அல்லது அமைப்பை தொடங்க உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாளை மறுநாள் அண்ணாமலை அறிவிப்பார் எனவும் திர்பார்ப்பு உள்ளது .
பாஜக தலைவர் நிதின் நபினை சந்திக்கும் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிதின் நபினை நாளை சந்தித்து தனது நிலைப்பாடு குறித்த பேச உள்ளதாகவும், பாஜக அண்ணாமலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பது குறித்தும் பல கருத்துக்கள் வலம் வருகிறது. குறிப்பாக அண்ணாமலையின் டெல்லி பயணம் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
அண்ணாமலை எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை தரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.