

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களில் இருக்கும் நிலையில் மற்ற கட்சிகள் தங்கள் பரப்புரையை அதிகரித்துவிட்ட நிலையில் பாஜகவினர் இன்னும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் பாஜக இன்னும் தனது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இந்நிலையில் பாஜகவின் கோட்டை என கருதப்படும் கோவையின் வடக்கு தொகுதி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் பாஜகவின் தமிழக பிரநிதிகளுக்கு இடையில் இழுபறி நிலை இருந்து வருகிறது.
பாஜகவின் தமிழக அடையாளங்களாக அரசியல் பணியாற்றும் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் இடையே உள்ள மோதலால் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை வடக்கில் வானதி சீனிவாசன் உறுதியாக இருப்பதாலேயே மொடக்குறிச்சியில் அண்ணாமலையை களம் இறக்க பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வானதி சீனிவாசனை ராஜ்யசபா எம்பி ஆக்கி டெல்லி அரசியலுக்கு அழைத்து செல்லுமாறு அண்ணாமலை தரப்பு வலியுறுத்தி வருவதாகவும் பேசப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே கடிதம் அளித்திருந்த அண்ணாமலையை, கட்டாயம் போட்டியிட வேண்டும் எனத் தேசியத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. "போட்டியிட விருப்பமில்லை என்று கூறிவிட்டு, தற்போது திடீரென கோவை வடக்கு தொகுதிதான் வேண்டும் என கேட்பது முறையல்ல" என்று பாஜக தேசியத் தலைவர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மொடக்குறிச்சி அல்லது திருப்பூர் தெற்கு தொகுதிகளில் போட்டியிட அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனினும், அவர் தேர்தலில் நின்றே தீர வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளது என்பதிலும் பாஜக மேலிடம் உறுதியாக உள்ள நிலையில் தொகுதிகள் பற்றிய இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈரோட்டின் சட்டமன்றத் தொகுதியான மொடக்குறிச்சியின் தற்போதைய பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதியை தனது மருமகள் கிருத்திகா சிவக்குமாருக்கு ஒதுக்குமாறு கேட்பதாலும் சிக்கல் எழுந்துள்ளது.
பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தனது மருமகள் கிருத்திகா சிவகுமார் சீட் கேட்பதாலும், கோவை வடக்கு தொகுதி யாருக்கு என்பதிலும் அண்ணாமலையின் தொகுதி விருப்பமும் என பல்வேறு தொகுதிப் பங்கீடு குளறுபடிகளால் பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை இரவும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் என்பதால், இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.