

அமெரிக்க இரான் போர் பதற்றம் உலகளவில் பெரும் பொருளாதார விளைவுகளைத் தந்து கொண்டிருக்கும் நிலையில் எரிபொருள் சந்தையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு,இறக்குமதி பாதிப்பு மற்றும் அதிகரித்த போக்குவரத்து செலவுகள் , பிரீமியம் எரிபொருள் தேவை மற்றும் இயக்க செலவு காரணிகள் போன்றவற்றின் காரணமாக எரிபொருள் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது டெல்லியில் இந்த விலை ஏற்றம் அரங்கேறி உள்ளது.
டெல்லியில் XP100 எனப்படும் பிரீமியம் எரிபொருளின் (premium petrol) விலை லிட்டருக்கு ₹149-லிருந்து ₹11 உயர்வுடன் ₹160 ஆக (ஏப்ரல் 1 ) இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி தருகிறது.
100-ஆக்டேன் உயர் செயல்திறன் XP100 பெட்ரோல் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் அதிவேக சூப்பர் பைக்குகளின் இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பெட்ரோல் அனைத்து நிலையங்களிலும் கிடைக்காது; குறிப்பிட்ட சில இந்தியன் ஆயில் (IOCL) நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் XP100 பெட்ரோல் (பிரீமியம் வகை) மற்றும் எக்ஸ்ட்ரா கிரீன் (பிரீமியம் டீசல்) ஆகியவற்றின் விலைகள் மட்டுமே டெல்லியில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலையேற்றத்தால் பொதுவாக பயன்படுத்தப்படும் நார்மல் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இதேபோல், எக்ஸ்ட்ரா கிரீன் (பிரீமியம் டீசல்) அதன் முந்தைய விலையான ரூ.91.49-க்கு பதிலாக, இனி ரூ.92.99-க்கு விற்கப்படுகிறது.
XP100 பிரீமியம் பெட்ரோல் தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டும் கிடைக்கும் என்றாலும் இந்த விலையேற்றம் இங்கு நடைமுறைப்படுத்தப்படாது. எனினும் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தால் பெட்ரோல் விலையிலும் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.