

தனது தந்தையின் உடல்நிலை காரணமாகச் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக, கடந்த வாரம் நயினார் நாகேந்திரனிடம் அண்ணாமலை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலின் போது பாஜகவின் முக்கிய பிரச்சாரகராக மட்டும் செயல்படப்போவதாக அவர் கூறியது பாஜக தொண்டர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியாற்றத் தயாராக இருந்தும், பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு வெறும் ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், தேர்தல் பணிகளிலிருந்து அண்ணாமலை விலகியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் (RSS) நிர்வாகிகள் விளக்கம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சென்னை ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தமிழக பாஜகவின் முக்கிய 13 நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளின் கேள்விகளுக்கு அண்ணாமலை அளித்த பதில் வருமாறு: "சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த என்.டி.ஏ (NDA) கூட்டணியின் வியூகம் என்ன? இது தொடர்பாக என்னுடன் யாரும் விவாதிக்கவில்லை. திமுகவை வீழ்த்துவதற்கான வியூகத்தைப் பற்றி விவாதிக்காமல், நான் எப்படி களத்திற்குச் சென்று அரசியல் செய்ய முடியும்? வியூகம் என்னவென்றே கூறாமல் என்னை தேர்தல் பணியாற்றுமாறு சொன்னால் எப்படிப் பணியாற்றுவது? கமலாலயத்தில் உள்ள கணினியில் டைப் செய்து, பிரிண்டரில் அச்சிட்டுக் கொடுத்தால் மட்டும் போதுமா?"
"எனக்குப் பொறுப்பு முக்கியமல்ல; வியூகம்தான் முக்கியம். எந்த அடிப்படையில் ஆறு தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளராக நியமித்தனர்? ஒரு தொகுதி என்றாலும் நான் பணியாற்றத் தயார். ஆனால், பத்மநாபபுரம் மற்றும் மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் என்னை நியமித்ததற்கான காரணம் என்ன? வியூகத்தை விளக்கிக் கூறினால் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராகப் பணியாற்றத் தயார். அதைச் சொல்லாமல், 'நான் சொல்வதைக் கேட்க வேண்டும்' என்கிற தொனியில் கட்சி அணுகுவது நியாயமா? என்னைச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் சொல்கிறீர்கள்; தொகுதியின் பெயரைக் கூறுங்கள், இப்போதே பணியைத் தொடங்குகிறேன். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதியைக் கூறி போட்டியிடச் சொன்னால் என்னால் எப்படி வெற்றி பெற முடியும்? வெற்றிக்கான வியூகத்தைக் கூறினால் பாஜக மற்றும் என்.டி.ஏ வெற்றிக்காக எந்தப் பணியையும் செய்யத் தயார்" எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
கட்சிக்காக உழைக்கத் தயார் என்றாலும், அதற்கான சரியான வியூகத்தை மேலிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கருத்துக்கு டெல்லி மேலிடம் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை அறிய அரசியல் வட்டாரங்களும் அண்ணாமலையின் ஆதரவாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.