மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா..? ஷாக்கிங் நியூஸ் சொன்ன பாரத் பெட்ரோலியம்..!!

தற்போதைய சூழ்நிலையில், மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மனிதவள இயக்குநர் ராஜ் குமார் துபே கூறியுள்ளார்.
BPCL, fuel price
BPCL, fuel price
Updated on

அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையோன மேற்கு ஆசிய போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் மற்றும் கேஸ் வினியோகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றம் இன்றி இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் 70-72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, பதற்றத்தின் உச்சத்தில் 120 டாலரை கடந்தது. கடந்த வாரம் 104-110 டாலர் என்ற அளவிலும், தற்போது 113-115 வரையும் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தற்போது உயர்ந்துள்ளது.

கடந்த 15-ம்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11ம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த 19-ம்தேதி 2-வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் உயர்ந்தன. தற்போது 3-வது முறையாக 23-ம்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ரூ.105.31க்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து ரூ.96.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு அடுத்த ஷாக்..! பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எதெல்லாம் ஏறப்போகுது தெரியுமா..?
BPCL, fuel price

கடந்த 9 நாட்களில் மட்டும் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.4.47 காசும், டீசல் ரூ.4.59 காசும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 50% க்கும் அதிகமாக உயர்ந்ததால், உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கியபங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் விநியோகம் பலவீனமடைந்ததை ஈடுசெய்ய, இந்தியா கச்சா எண்ணெய்க்கு ரஷ்யா, வெனிசுலா, பிரேசில், ஆப்பிரிக்க போன்ற மாற்று விநியோகஸ்தர்களை அதிகளவில் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவிவரும் உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இப்படியே தொடர்ந்தால், இனிவரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மேலும் ஒரு விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) இயக்குநர் எச்.ஆர். ராஜ் குமார் துபே கூறினார். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகளால் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் மீது ஏற்படும் அழுத்தம் குறித்துப் பேசிய துபே, ‘இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க கொள்கை வகுப்பாளர்களிடம் தற்போது குறைந்த அளவிலான வழிகளே உள்ளன என்றார்.

இப்போது நம்மிடம் மூன்றுவழிகள் தான் உள்ளன. பெட்ரோல், டீசல் நிலையங்களில் விலையை நேரடியாக உயர்த்துவது. அதாவது நுகர்வோர் மீது சுமையை ஏற்றுவது. அல்லது பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த நஷ்டங்களை ஏற்றுக்கொண்டு, மேலும் நஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். மூன்றாவது, பற்றாக்குறை நிதியுதவி மூலம் அரசாங்கம் நிதி வழங்குவது. தற்போதைய சூழலில், இதே நிலை நீடித்தால், விலை உயர்வு என்பது நிச்சயம் நடக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

20% முதல் 50% வரையிலான கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆரம்பத்தில் தற்காலிகமானது என்று கருதப்பட்டாலும், இந்த இடையூறு நீண்ட காலத்திற்குத் தொடரக்கூடும் என்று துபே எச்சரித்தார்.

தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, இது தொடரும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறிய அவர், நடந்து வரும் மேற்கு ஆசிய மோதலால் எரிசக்தி உள்கட்டமைப்பு அழிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இந்திய எரிசக்தி நிறுவனங்கள் தங்களின் விநியோக வலையமைப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன என்று கூறிய அவர் முன்பு, எங்களிடம் 20 விநியோக மையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 20-லிருந்து, இப்போது 40 விநியோக மையங்களுக்கு முன்னேறியுள்ளோம், இதில் ரஷ்யாவும் அடங்கும். அந்த அளவிற்கு, பன்முகப்படுத்தப்பட்ட விநியோக வழிகள் எங்களுக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கின்றன என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
9 நாட்களில் 3 முறை.! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்.!
BPCL, fuel price

மேலும் நாட்டில் பெட்ரோல், டீசல் இருப்பு தாராளமாக உள்ளதாகவும், சமூக ஊடகங்களில் பரவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிக்கத் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com