

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை ரூ.3.14 மற்றும் டீசல் விலை ரூ.3.11 உயர்ந்துள்ளது.
இதன் தாக்கத்தை பலர் முதலில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கவனித்தாலும், இதன் பெரும் தாக்கம் பொதுவாக வேறு இடத்தில்தான் உணரப்படுகிறது.. அது மக்களின் அன்றாட வாழ்க்கையில்...
எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சில நாட்களிலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு என்பது வெறும் வாகன எரிபொருளோடு முடிந்துவிடுவதில்லை.
இது வரும் வாரங்களில் நள்ளிரவு பிளிங்கிட் ஆர்டர், உங்கள் காலை பால் பாக்கெட், அலுவலகத்திற்கு நீங்கள் முன்பதிவு செய்யும் வாடகைக் கார், ஏன் விமான டிக்கெட்டுகள் கூட படிப்படியாக விலை உயரக்கூடும். அதாவது இது ஒரு சங்கிலித் தொடர் போல பல்வேறு துறைகளில் விலை உயர்வை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கான காரணம் எளிமையானது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏறக்குறைய எல்லாப் பொருட்களுக்கும் பின்னால் எரிபொருள் அமைதியாக இருக்கிறது.
காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் முதல் மளிகைப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வரும் டெலிவரி பைக்குகள் வரை, இந்தியாவின் பொருளாதாரம் டீசல் மற்றும் பெட்ரோலை பெருமளவில் சார்ந்துள்ளது. எனவே, எரிபொருள் விலை உயரும்போது, போக்குவரத்துச் செலவுகள் மெதுவாக மற்ற எல்லா இடங்களிலும் வெளிப்படத் தொடங்குகின்றன.
காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், பால், பாக்கெட் உணவுகள், மருந்துகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான லாரிகள் டீசலில் இயங்குகின்றன. பேருந்துகள், டிராக்டர்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்களும் இதையே பெருமளவில் சார்ந்துள்ளன.
அதாவது, டீசல் விலை உயரும்போது, சரக்குகளை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குக் கொண்டு செல்ல போக்குவரத்து நிறுவனங்கள் இறுதியில் அதிக செலவு செய்கின்றன. மேலும் பெரும்பாலும் அந்தக் கூடுதல் செலவில் ஒரு பகுதியையாவது நுகர்வோர் மீது சுமத்துகின்றன.
பெட்ரோல் விலை உயர்வால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோரின் மாதாந்திர செலவு அதிகரிக்கும். அதைவிட முக்கியமாக, டீசல் விலை உயர்வால் லாரிகள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கச் செலவு கூடும். இதனால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் மற்றும் சரக்குக் போக்குவரத்து கட்டணங்கள் (Freight charges) உயர வாய்ப்புள்ளது.
இந்தியாவில், கிட்டத்தட்ட 65 சதவீத சரக்குப் போக்குவரத்து சாலை வழியாகவே நடைபெறுகிறது. அதில் ஏறக்குறைய அனைத்தும் டீசலில்தான் இயங்குகின்றன. இதன் பொருள், டீசல் விலை உயர்வு என்பது வெறும் போக்குவரத்து சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது வாழ்க்கைச் செலவு சம்பந்தப்பட்டது.
இங்குதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் முதலில் தெரிகிறது. காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் தானியங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கான டீசல் செலவு அதிகரிப்பதால், சந்தையில் இவற்றின் விலை உயரும். ஏற்கனவே அமுல் (Amul) மற்றும் மதர் டைரி போன்ற நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் சமையலறை பட்ஜெட் மேலும் நெருக்கடிக்குள்ளாகும்.
மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் தக்காளி, வெங்காயம், கீரை வகைகள் மற்றும் பழங்களின் விலை சற்றே அதிகரிக்கக்கூடும்.
இதேபோல், அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், எண்ணெய், சர்க்கரை, தேநீர், பிஸ்கட்கள் அனைத்தும் டீசல் விநியோகத்தையே சார்ந்துள்ளன.
நிறுவனங்கள் இரண்டு வழிகளில் பதிலளிக்கின்றன: அதிகபட்ச சில்லறை விலையை (MRP) உயர்த்துவது, அல்லது பொட்டல அளவைக் குறைப்பது (சுருக்கப் பணவீக்கம்). சில நேரங்களில் இரண்டுமே.
பல வணிக சமையலறைகள் சிஎன்ஜி-யைப் பயன்படுத்துகின்றன. சிஎன்ஜி விலையும் ரூ.2 உயர்ந்துள்ளதால், இது சமையல் செலவுகளை நேரடியாக அதிகரிக்கின்றன. வெளியே சாப்பிடுவது, வீட்டிற்கே வரவழைப்பது, அல்லது தபாவில் இருந்து உணவை வாங்கிச் சாப்பிடுவது போன்றவை மெதுவாக அதிக விலை கொண்டதாக மாறக்கூடும்.
சிஎன்ஜி ஆட்டோக்களும் பெட்ரோல் வாடகைக் கார்களும் இனி கட்டணத்தை அதிகரிக்கும். கூடுதலாக, பள்ளி வேன்களும் கட்டணங்களை உயர்த்தக்கூடும். பொதுவாக, இவை நிலையான ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும்போது, எரிபொருள் செலவுகளை ஈடுகட்ட நடத்துநர்கள் அதிக கட்டணங்களைக் கோருகின்றனர்.
மளிகை விநியோகத் தளங்கள், உணவு விநியோக செயலிகள் (Food delivery apps), ஈ-காமர்ஸ் தளங்கள் மற்றும் கொரியர் நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு அதிகரிக்கும். பொதுவாக இவர்கள் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தாலும், பெரும்பாலான விநியோகஸ்தர்கள் இன்னும் பெட்ரோல் பைக்குகளையே பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக, டெலிவரி கட்டணங்கள் உயர்த்தப்படலாம் அல்லது தளக் கட்டணங்களைச் சேர்ப்பது அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் குறைக்கப்படலாம். அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இதை விரைவாகக் கவனிப்பார்கள்.
பெட்ரோல் விலை உயர்வு சாலைப் போக்குவரத்தை நேரடியாகப் பாதிக்கும் அதே வேளையில், விமான எரிபொருள் விலைகள் மறைமுகமாக விமானப் பயணங்களையும் அதிக செலவு மிக்கதாக மாற்றக்கூடும்.
கிராமப்புறப் பொருளாதாரம் டீசலை பெரிதும் நம்பியுள்ளது. டிராக்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான செலவு கூடுவதால், விவசாயிகளின் சாகுபடிச் செலவு அதிகரித்து, அது ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கத்திற்கு (Food Inflation) வழிவகுக்கும்.
சிமெண்ட், எஃகு, மணல், செங்கல்கள் போன்றவை டீசல் வாகனங்களை சார்ந்தவை. அதிக போக்குவரத்துச் செலவு, மூலப்பொருட்களின் இறக்குமதி விலையை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கு, இது கூடுதல் செலவுகளுக்கு வழிவகுக்கும். புதிய திட்டங்களுக்கு, அதிக மதிப்பீடுகளை ஏற்படுத்தும்.
மேலும், தொழிற்சாலைகள் டீசல் ஜெனரேட்டர்களையும் டீசல் தளவாடங்களையும் பயன்படுத்துகின்றன. மின்னணுப் பொருட்கள், ஆடைகள், மருந்துகள், வீட்டு உபகரணங்கள் இவற்றின் விலையில் சரக்குக் கட்டணம் இனி சேர்க்கப்படும்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தணியாத வரை, வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் வாங்கும் திறனை (Purchasing power) குறைப்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.
அதனால்தான், ரூ.3 எரிபொருள் விலை உயர்வு என்பது பெட்ரோல் நிலையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.
டீசல் விலை உயரும்போது, எப்பொருளையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கான செலவும் உயர்கிறது. மேலும், பொருட்களை நகர்த்துவதற்கான செலவு உயரும்போது, அப்பொருட்களை வாங்குவதற்கான விலையும் அதிகரிக்கிறது.
இதனால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.