

தற்போது உலகத்தினர் பெரும்பாலோரை அச்சுறுத்தி வரும் பெரும் பாதிப்பு மூட்டு வலி ஆகும். இளைஞர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை காரணமாகவும், முதியவர்களுக்கு வயது முதிர்வால் குருத்தெலும்புகள் (Cartilage) தேய்வடைவதாலும் இந்த வலி ஏற்படுகிறது.
வலி அதிகமாக இருந்தால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Knee Replacement) மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை இன்றியே இந்த வலியிலிருந்து விடுதலை பெறலாம் என்ற இனிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை மீண்டும் இயற்கையாக வளரச் செய்யும் முறையைக் கண்டறிந்த ஆராய்ச்சிதான் அந்தத் தகவல்.
குறிப்பாக வயது முதிர்வால் மூட்டுகளில் அதிகரிக்கும் 15 -PGDH என்னும் புரதத்தை செயலிழக்க செய்து உடலில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டி இயற்கையாகவே குருத்தெலும்புகளை மீண்டும் வளர செய்ய முடியும் என்ற கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியப் படுத்துகிறது. இந்த ஆய்வை எலிகளிடம் நடத்தியதில் வெற்றி அடைந்ததாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இன்றி எளிய மருந்துகள் மூலம் மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குருத்தெலும்புகள் தானாக மீண்டும் வளர்ச்சி பெறுமா என்பது அனைவரின் சந்தேகமாக உள்ளது. குருத்தெலும்பில் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகள் இல்லை என்பதால் சேதமாகும் போது உடல் தானாக சரிசெய்யும் திறன் மிகவும் குறைவு என்றும் இதுதான் Osteoarthritis போன்ற மூட்டு நோய்கள் குணமடையாமல் நீடிக்க காரணம் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எனவே, "இயற்கையாகவே குருத்தெலும்பு முழுமையாக மீண்டும் வளர்கிறது" என்ற கண்டுபிடிப்பு இன்னும் மருத்துவ ரீதியாக முழுமையான சிகிச்சையாக நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், அதற்கான ஆராய்ச்சிகள் உலகெங்கும் தீவிரமாக நடந்து வருகின்றன.
குருத்தெலும்புகளை இயற்கை முறையில் வளரச் செய்யும் ஆராய்ச்சிகள் முதன்மையாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்கது, Bone Morphogenetic Proteins (BMPs) தொடர்பான ஆய்வு. எலும்பு உருவாவதை இயற்கையாகத் தூண்டும் இந்த ஆராய்ச்சியை முதலில் மார்ஷல் ஆர். யூரிஸ்ட் (Marshall R. Urist) என்பவர் 1965-ஆம் ஆண்டு அறிவியல் இதழில் வெளியிட்டார். இதே BMP-கள்தான் இப்போதும் எலும்பு வளர்ச்சியைத் தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.
Stem Cells (மூலக்கணுக்கள்)
உடலிலேயே இருக்கும் stem cells-ஐ தூண்டினால் cartilage போன்ற திசுக்கள் உருவாகலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. எலிகள் மீதான ஆராய்ச்சி வெற்றி பெற்றிருந்தாலும் மனிதர்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர்தான் இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
எதிர்கால மருத்துவத்தில் 15-PGDH Aging reversal research-ல் முக்கிய target Osteoarthritis-க்கு (Regenerative medicine + 15-PGDH inhibition) இன்னும் 5–10 ஆண்டுகளில் மனித சிகிச்சையாக மாற வாய்ப்பு உள்ளது என்கிறது மருத்துவ உலகம். அதுவரை காத்திருப்போம்.