

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொறுப்பேற்ற 1 மாதத்திலேயே மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுத்து வருகிறார்.
அதற்கேற்ப தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடினார். முதல்வரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மேலும் கஞ்சா மற்றும் குட்கா விநியோகத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று காலை சென்னை, காமராஜர் சாலையில் மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதல்வர் விஜய் உட்பட அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியை முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுடன், போட்டியில் பங்கேற்ற அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்ட்டு வருகிறது. போதைப் பழக்கத்தை முழுமையாக ஒழிப்பதே இதன் நோக்கம். இந்நிலையில் போதைப் பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இன்று காலை சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது முதல்வர் விஜய்யுடன் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் விஜய்யுடன் அனைவரும் எடுத்துக் கொண்ட உறுதிமொழி, “போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று நான் உளமாற உறுதி கூறுகிறேன்.”
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்த பிறகு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய்.
போதைப்பொருள் எதிர்ப்பு தின விழா மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முதல்வர் விஜயுடன் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். வரலாற்றில் முதல்முறையாக தமிழக முதல்வர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை என மாரத்தான் வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதல்வர் விஜய்யுடன் மாரத்தான் போட்டியில் ஓடியது அதிக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டப் பந்தய ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டன. வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.