இந்துக்களுக்கு எதிரான கட்சியான பாஜக தேர்தலுக்கு பிறகு இந்துக்களை மறந்துவிடுவார்கள் - ஆம் ஆத்மியின் அதிரடி விமர்சனம்!

இந்துக்களுக்கு எதிரான கட்சியான பாஜக  தேர்தலுக்கு பிறகு இந்துக்களை மறந்துவிடுவார்கள் - ஆம் ஆத்மியின் அதிரடி விமர்சனம்!
Published on

பா.ஜ.க தலையீட்டின் பெயரால் டெல்லியில் உள்ள கோயில்கள் இடிக்கப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. தேர்தல் வரை இந்துக்களுக்கான கட்சியாக தன்னை காட்டிக்கொள்ளும் பா.ஜ.கவினர், தேர்தல் முடிந்த பின்னர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் ஆம் ஆத்மியின் டெல்லி அமைச்சர்கள் குற்றம் சாட்டியிருககிறார்கள்.

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணி கிழக்கு டெல்லியில் நடைபெற்று வருகிறது. மந்தாவளியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரும்பு கேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றியிருக்கிறார்கள். விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ளவற்றை அகற்றுவது வழக்கமாக நடைபெறுவதுதான் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இரும்பு கேட்டை மட்டுமல்ல கோயிலையும் இடிப்பதற்கு பா.ஜ.கவினர் திட்டமிட்டிருப்பதாக ஆம் ஆத்மி தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. கோயிலின் இரும்பு கேட் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து கோயில் முழுவதுமாக இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி தொண்டர்கள் நினைக்கிறார்கள். கோயிலை இடிக்கக்கூடாது என்று 40 பேர் ஆர்ப்பாட்டம் நடத்திவந்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ஆபத்து இருப்பதால் அங்கே நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கோயில் இடிக்கப்படக்கூடாது என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. இதை தேவையில்லாமல் ஆம் ஆத்மி கட்சியினர் அரசியலாக்குகிறார்கள் என்று டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா விளக்கம் அளித்திருக்கிறார்.

டெல்லியின் லெப்டினென்ட் கவர்னர் வி.கே சக்ஸேனாவின் உத்தரவைத் தொடர்ந்து கோயிலை இடித்துத் தள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. இது குறித்த கோப்பு டெல்லியின் உள்துறைச் அமைச்சருக்கு அனுப்பப்பட்டபோது அதை எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி விளக்கமளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரான பிரியங்கா, பா.ஜ.கவும் டெல்லியின் லேப்டினெண்ட் கவர்னரும் டெல்லியின் அமைதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்துக்களையும் கோயில்களையும் தாக்குவதை எப்போது நிறுத்தப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் டெல்லியில் உச்சத்தில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com