ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன்15ஐ அறிமுகம் செய்ய உள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள், உயர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஐபோன் 15ன் உற்பத்தியை சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் கூடுதலாக தயாரிக்க தற்போது ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்திக் கூடத்தை அமைத்துள்ள பாக்ஸ்கான் ஆலையுடன் ஒப்பந்தம் செய்து ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி நிலையமாக உள்ள சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அதிக அளவிலான உற்பத்தி தடைப்பட்டிருக்கிறது. மேலும், இதில் பல்வேறு சிக்கல்களும் நிலவி வருகிறது. இவற்றை சரி செய்யும் விதமாக சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் சீனாவில் தயாரிக்கப்பட்டு, சில வாரங்கள் கழித்து பாக்ஸ்கான் ஆலையில் உருவாக்கப்படும் புதிய மாடல் ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே பாக்ஸ்கான் ஆலையிலும் இனி உற்பத்தியை தொடங்க உள்ளது. இதன் மூலம் புதிய வகை ஐபோன்கள் உடனேயே இந்தியா பயனாளிகளின் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படும். மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.