

மத்திய தொலைத்தொடர்பு துறையால் தொடங்கப்பட்ட ஒரு இணையதளம் மற்றும் செயலி தான் 'சஞ்சார் சாத்தி'. இது தொலைத்தொடர்ப்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருடப்பட்ட அல்லது தொலைந்து போன செல்போன்களை எளிதில் கண்டுபிடித்து அதை பயன்படுத்த முடியாமல் தடுக்கவும், மோசடி அழைப்புகள் மற்றும் SMS மூலம் நிகழும் நிதி மற்றும் அடையாள திருட்டு மோசடிகளை கட்டுப்படுத்தவும் இந்த செயலி உதவுகிறது.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகத்தளங்கள் மூலம் வழங்கப்படும் தவறான பயன்பாடு எதுவாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் உடனடியாக இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம். ஒருவரின் பெயரில் எத்தனை சிம் கார்டு இணைப்புகள் உள்ளது என்பதை பயனாளிகள் சரிபார்த்து தங்கள் பேரில் உள்ள போலி அல்லது தேவையற்ற இணைப்புகளை நீக்கவும், 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi)செயலி உதவுகிறது.
இந்த செயலியை ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இனிமேல் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு வரும் அனைத்து புதிய ஸ்மார்ட் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி முன்பே நிறுவப்பட்டிருக்கும் என்றும் ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன் பயனாளிகள் தங்களுக்கு வரும் மென்பொருள் புதுப்பிப்புகள் மூலமாக 'சஞ்சார் சாத்தி'செயலியை பெற வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொலைந்து போன அல்லது திருடப்பட்ட செல்போன்களை பற்றி புகாரளிக்கவும், வாங்குவதற்கு முன் புதிய அல்லது பழைய செல்போன்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், சந்தேகிக்கப்படும் மோசடி அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்கவும் சஞ்சார் சாத்தி ஆப்பை பதிவிறக்கம் செய்யுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பழைய செல்போன்களிலும் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த செயலி இடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது தனியுரிமை கொள்கைக்கு எதிரானது என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “ ‘சஞ்சார் சாத்தி’ செயலி வேண்டாம் என்றால், நீக்கி கொள்ளலாம். இந்தச் செயலி கட்டாயமில்லை, செல்போனில் இடம்பெற வேண்டுமா என்பதை பயனர்களே முடிவு செய்யலாம். செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை, என்றும் விளக்கம் அளித்துள்ளார்.”
இந்நிலையில், இந்த செயலியை எல்லா மொபைல்களிலும் நிறுவ உத்தரவிட்டிருந்த நிலையில், முதல் நிறுவனமாக, பிரபல ஆப்பிள் நிறுவனம் ஒன்றிய அரசின் உத்தரவை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற செயலிகள் ஐபோன்களில் இருக்கும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்குச் சிக்கல்களை உருவாக்குவதாக ஆப்பிள் கருதுகிறது. மிகவும் பாதுகாப்பானது என்பதன் காரணமாகவே ஆப்பிள் மக்கள் மத்தியில் பிரபலம். எனவே, இதை ஏற்றால் நம்பகத்தன்மை போய்விடும் என நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக விரைவில் ஆப்பிள் நிறுவனம், மத்திய அரசை சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘சஞ்சார் சாத்தி’ இணையதளம் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதியும், செயலி கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வந்தது. இதுவரை ‘சஞ்சார் சாத்தி’ இணையதளம், செயலி உதவியோடு மாயமான 7.13 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.