
மும்பையை சேர்ந்த 26 வயதான தொழில்நுட்ப வல்லுநர் க்ஷிடிஜ் சோடாபே (Kshitij Zodape) , நீர் சாகச விளையாட்டுகளில் ஆர்வம் மிகுந்தவர். சமீபத்தில் இவர் ஸ்கூபா டைவிங் செய்வதற்காக பாண்டிச்சேரி வந்துள்ளார். பாண்டிச்சேரி கடற்கரை பகுதியில் க்ஷிதிஜ் சுமார் 36 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் டைவ் செய்து மேலும் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது எடை பெல்ட் நழுவியது , இதனால் அவர் வேகமாக மேலே தள்ளப்பட்டார் , தண்ணீரில் ஒருவர் மெதுவாகத் தான் மேலே ஏற வேண்டும் . வேகமாக ஒருவர் உந்தப்பட்டால் நீரின் அழுத்தம் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்படக் கூடும். அதீத அழுத்தம் உறுப்பு சேதங்களை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.
அவர் ஆபத்தை உணர்ந்த போது யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.அப்போது அவரது ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் சைரன் ஒலிக்க தொடங்கியது. தண்ணீர் மிகவும் கொந்தளிப்பாகவும், தெளிவு இல்லாமலும் இருந்துள்ளது. தொடர்ச்சியான அலாரம் மூலம் வாட்ச் கவனத்தை ஈர்த்தது. வேகமாக மேலே ஏறுவதால் காயத்தை ஏற்படுத்தும் என்று வாட்ச் எச்சரித்தது. அவரது மேலே எழும் வேகத்தை குறைக்க சொன்னது. எச்சரிக்கைகளை ஆபத்தான வேளையில் அவர் புரிந்துக் கொண்டாலும் கூட அவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. எடை பெல்ட் கடலுக்குள் நழுவி விழுந்ததால் அவரது மேல் நோக்கி செல்லும் வேகம் குறையவில்லை.வாட்சின் எச்சரிக்கை ஒலி க்ஷிதிஜுடன் இருந்த பயிற்றுவிப்பாளரின் கவனத்தை ஈர்த்தது.
க்ஷிதிஜ் எச்சரிக்கயை உணர்ந்தும் செயல்பட முடியாத வேளையில் , கடிகாரம் இன்னும் சத்தமாக சைரனை ஒலிக்க வைத்தது. இதை கேட்ட ஸ்கூபா டைவ் பயிற்சியாளர் , அவரை தேடத் தொடங்கினார். க்ஷிதிஜை மேலே ஏறி பிடித்து விட்டார். அதன் பின்னர் அவர் காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் அவசர அலாரம் மட்டும் இல்லையென்றால், க்ஷிதிஜ் நுரையீரல் அதிகமாக விரிவடையும் அபாயத்தில் இருந்திருப்பார்.
நீருக்கடியில், உடல் அழுத்தம் காரணமாக சுருக்கப்படுகிறது, மேலும் மிக விரைவாக மேலே ஏறுவது நுரையீரல் பலூன் போல பெரியதாக விரிவடைய செய்யும். அதிக அழுத்தம் காரணமாக நுரையீரல் ஒருவேளை உடைந்து விடக்கூடும். இதனால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடும். ஆனால் இந்த அபாயங்களை எல்லாம் அவர் கடந்துவிட்டார். அவர் காப்பாற்றப்பட ஆப்பிள் அல்ட்ரா வாட்சில் உள்ள சைரன் சத்தமே காரணமாக இருந்தது.உயிர் தப்பிய சில நாட்கள் கழித்து க்ஷிதிஜ் ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு கடிதம் எழுதி, சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் அவசர சைரன் வேலை செய்யும் விதம்:
ஆப்பிள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது. இந்த கடிகாரத்தில் அவசரகாலத்திற்காக ஏற்ப உதவும் வகையில் அவசர சைரன் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருந்தன.க்ஷிதிஜின் உயிர் தப்பிய சம்பவத்தில், கடிகாரம் அவரது நிலையை உணர்ந்தது பயனரிடமிருந்து எந்த பதிலும் இல்லாதபோது , சைரனை தொடர்ச்சியாக இயக்கியது.
இதனால் 180 மீட்டர் தொலைவில் இருந்து கேட்கக்கூடிய சைரன்களை தொடர்ச்சியாக வெளியிட்டு காப்பாற்றியது. சைரன் அணைக்கப்படும் வரை அல்லது கடிகாரத்தின் பேட்டரி தீர்ந்து போகும் வரை தொடர்ந்து ஒலிக்கும். கடிகாரம் ஈரமாக இருந்தால் சைரனின் சத்தம் சற்று குறையும். ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் மனித உயிரை காப்பாற்றியது இது முதல் முறை அல்ல. முன்பும் இது போன்ற ஆபத்தான சமயத்தில் சிலரை உயிரை காப்பாற்றி உள்ளது.